ராமேசுவரம்: பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.
15 கிலோ எடை, 3 அடி நீளம், 3 அடி உயரம் கொண்ட இந்த மீனின் வால் பகுதியான துடுப்புப் பகுதி உருமாறி இருந்ததால், பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் மீனைப் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மீன்வளத் துறையினர் கூறும்போது, “இந்த மீனின் பெயர் சூரிய மீன். இது அதிகபட்சம் 3 மீட்டர் நீளமும், 1,000 கிலோ எடை வரையிலும் வளரும். சாதுவான மீன் இனமான இது சிப்பி, நண்டு, ஜெல்லி, சிங்கி, இறால் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.
இந்த மீனின் துடுப்புப் பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும். அரிய வகை சூரிய மீன்கள் பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும். மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாக காணப்படும். பொதுவாக இந்த வகை மீனை மக்கள் விரும்பிச் சாப்பிடுவது கிடையாது” என்றனர்.