கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு | Mudukulathur farmer daughter selected as cultural ambassador
ராமநாதபுரம்: தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025′ போட்டியில் பங்கேற்ற முதுகுளத்தூர் விவசாயி மகள் கலாச்சார தூதராக தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர் (28). இவர் பி.டெக். முடித்துவிட்டு பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், மாடலிங்கும் செய்து வருகிறார்.
அண்மையில் புனேயில் நடந்த `மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025′ போட்டியில் ஜோதிமலர் வென்றார். இதையடுத்து, கடந்த 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025′ அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதிமலர் பங்கேற்றார்.
சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, சுற்றுலா, கலாச்சாரப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்காக நடத்தப்பட்ட மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவின் பாரம்பரிய, வளமான கலாச்சாரம், மரபு குறித்து விளக்கினார். இதையடுத்து, ஜோதிமலர் மிஸ் ஹெரிடேஜ் இன்டர் நேஷனல் 2025 கலாச்சார தூதராக தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஜோதிமலர் கூறும்போது, “இந்தியா சார்பில் மிஸ் ஹெரி டேஜ் இன்டர்நேஷனல் கலாச்சார தூதராக தேர்வானது பெருமையாக உள்ளது. சர்வதேச அரங்கில் நமது நாட்டின் வளமான கலாச்சாரம், மரபுகள், பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமையாக உள்ளது” என்றார்.