EBM News Tamil
Leading News Portal in Tamil

72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள் | two friends travel the world at the age of 72


திருவனந்தபுரம்: கேரளா​வின் கண்​ணூர் மாவட்​டம், மாதமங்​கலத்தை சேர்ந்​தவர் சரோஜினி (72). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மாவதி (72). இரு​வரும் சிறு​வயது முதலே நெருங்​கிய தோழிகள் ஆவர். திரு​மணத்​துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார்.

கந்த 1987-ம் ஆண்​டில் சரோஜினி​யின் கணவர் உயி​ரிழந்​தார். இதன்​ பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறி​னார். மிக நீண்ட காலத்​துக்கு பிறகு தோழிகள் ஒன்​றிணைந்​தனர்.

கடைசி காலத்​தில் வீட்​டில் முடங்​கி​யிருக்​காமல் உலகை சுற்​றிப் பார்க்க சரோஜினி​யும் பத்​மாவ​தி​யும் முடிவு செய்​தனர். முதல்​கட்​ட​மாக சபரிமலை, குரு​வாயூர், பழனி, மதுரை, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்​ளிட்ட புனித தலங்​களுக்கு சென்​றனர். இந்த இடங்​களில் சுவாமியை வழிபட்​டதோடு சில நாட்​கள் தங்​கி​யிருந்து சுற்​று​வட்​டார பகு​தி​களை​யும் பார்​வை​யிட்​டனர்.

இதைத் தொடர்ந்து குஜ​ராத், ராஜஸ்​தான், காசி, பத்​ரி​நாத், கேதர்​நாத் உள்​ளிட்ட சுற்​றுலாத் தலங்​கள், புனிதத் தலங்​களுக்கு சரோஜினி​யும் பத்​மாவ​தி​யும் சென்​றனர்.

இதுதொடர்​பாக பத்​மாவதி கூறும்போது, ‘‘எங்​கள் காலத்​தில் மொபைல்​போன் கிடை​யாது. இதனால் அடிக்​கடி பேசிக் கொள்ள முடி​யாது. சொந்த ஊரில் நடை​பெறும் முக்​கிய நிகழ்​வு​களின்​போது மட்​டும் சந்​தித்​துப் பேசுவோம்.

எனது கணவர் கருணாகரன் நம்​பி​யார் 9 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​து​விட்​டார். சரோஜினி​யின் கணவர் நாராயணனும் உயி​ரிழந்​து​விட்​டார். தற்​போது நாங்​கள் இரு​வரும் மாதமங்​கலத்​தில் வசிக்​கிறோம். இரு​வருக்​கும் பிள்​ளை​கள் உள்​ளனர். அவர்கள் பணி நிமித்​த​மாக பல்​வேறு ஊர்​களில் வசிக்​கின்​றனர்.

கடைசி காலத்​தில் ஒன்​றாக சேர்ந்து உலகை சுற்​றிப் பார்க்க முடிவு செய்​தோம். இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களை சுற்​றிப் பார்த்​தோம். முதல் வெளி​நாட்டு பயண​மாக அண்​மை​யில் மலேசி​யா​வுக்கு சென்​றோம். எங்​களுக்கு ஓய்​வூ​தி​யத் தொகை கிடைக்​கிறது. அந்த தொகை​யில் சுற்​றுலா செல்​கிறோம்’’ என்றார்.

சரோஜினி கூறும்போது, ‘‘அடுத்​தகட்​ட​மாக இந்​தோ​னேசி​யா​வின் பாலிக்கு செல்ல திட்​ட​மிட்டு இருந்​தோம். ஆனால் பத்​மாவதி ஏற்​கெனவே பாலிக்கு சுற்​றுலா சென்​றிருக்​கிறார். எனவே பாலி பயண திட்​டத்தை ரத்து செய்​து​விட்​டோம். விரை​வில் கொல்​கத்​தாவுக்கு செல்ல திட்​ட​மிட்டு இருக்​கிறோம்.

ஒவ்​வொரு பயணத்​தை​யும் டிஜிட்​டலில் பதிவு செய்து பிள்​ளை​களுக்​கும் உறவினர்​களுக்​கும் அனுப்பி வரு​கிறோம். வயதான காலத்​தில் வீட்​டில் முடங்கி கிடக்​காமல் சுற்​றுலா செல்​வது புது​வித அனுபவ​மாக இருக்​கிறது. இதன்​மூலம் மனதுக்​கும் உடலுக்​கும் புத்​துணர்ச்​சி கிடைக்​கிறது’’ என்றார்.