இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட்கள் அறிமுகம்! | New updates introduced in Google Maps for Indian users
சென்னை: அண்மையில் இந்திய கூகுள் மேப்ஸ் பயனர்களுக்காக முக்கிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயனர்களின் பயண திட்டத்தை சிறப்பாக அமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏதேனும் ஒரு புதிய இடத்துக்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் சர்ச் செய்யப்படுவதாக தகவல். இதன் ஒட்டுமொத்த தூரம் சுமார் 2.5+ பில்லியன் கிலோ மீட்டர் என தகவல்.
இந்நிலையில், இந்திய பயனர்களுக்காக சில அப்டேட்களை கூகுள் மேப்ஸில் கூகுள் நிறுவனம் கடந்த 6-ம் தேதி அறிமுகம் செய்தது. அந்த வகையில் கூகுளின் ஏஐ அசிஸ்டன்ட் Gemini-யை, கூகுள் சேர்த்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி பயனர்கள் Gemini உதவியை பெறலாம்.
அதேபோல பயனர்கள் பயணிக்கும் சாலையின் ஸ்பீடு லிமிட், விபத்து ஏற்படும் இடம் குறித்த தகவலையும் கூகுள் மேப்ஸில் இப்போது அறிந்து கொள்ள முடியும். இப்போதைக்கு இந்த அம்சம் டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் மட்டும் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சந்தையில் இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வானங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு ‘நவதார்ஸ்’ எனும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டர், பைக் போன்றவற்றை அவதார்களாக கட்டமைத்துக் கொள்ள முடியும். இந்த அம்சங்கள் முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகமாகும். அதன் பின்னர் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்துள்ளது.