இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர் | Businessman works as Uber driver at night to help poor girls education
புதுடெல்லி: இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உபேர் நிறுவனத்தின் ஒரு வாடகை காரில் ஏறினார். அந்தக் காரை 86 வயதான முதியவர் ஓட்டிச் சென்றார். அப்போது அவரிடம் ஓட்டுநர் பணியில் கிடைக்கும் சம்பளம் போதுமானதா என்று கேட்டுள்ளார்.
அப்போது அவர் கூறியது, தொழிலதிபருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவரது நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி வர்த்தகத்தை நடத்தி வருவது தெரியவந்தது. அவரது பூர்வீகம் இந்தியா என்பதும் தெரியவந்தது.
1929-ல் அவரது தந்தை பிஜி நாட்டில் தொடங்கிய வர்த்தகத்தை அவரது குடும்பத்தார் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஈட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த தொழிலதிபர் தினமும் இரவு நேரத்தில் உபேர் கால் டாக்ஸி ஓட்டுகிறார். இதில் வரும் வருமானத்தை 24 பெண் குழந்தைகளின் கல்விக்கு கொடுத்து உதவி வருகிறார் அவர். அவரின் 3 மகள்களும் உயர்கல்வி பயின்று வெற்றிகரமான பெண்களாக உலகில் வலம் வருகின்றனர். தனது மகள்களைப் போலவே அனைத்து பெண் குழந்தைகளும் வாழ்வில்
முன்னேற வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு நிதியுதவி செய்து வருகிறார்.