தமிழகத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரிப்பு | Increase in cough, fever and diarrhea due to climate change
சென்னை: தட்பவெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், தலைவலி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, “மழை காரணமாக வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குடிநீர் மாசுபாடு, அசுத்தமான உணவின் மூலம் ஜீரண மண்டலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சிலருக்கு அதனால் நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும், தலைவலி, இருமல் பிரச்சினைகளாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு – சர்க்கரை கரைசல், நீர், மோர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை போதிய அளவு அருந்தி உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். காய்ச்சிய நீரை பருகுவதுடன், வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றனர்.