EBM News Tamil
Leading News Portal in Tamil

கலாம் கற்றுக்கொண்ட பாடம்  | Lesson learned by Kalam explained


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ) உள்நாட்டு ஏவூர்திகள் தயாரிப்பில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. வறுமையும் பஞ்சமும் மிகுந்த நாடாக இந்தியா அறியப்பட்டுக்கொண்டிருந்த நாள்களில் பி.எஸ்.எல்.வி. ஏவூர்தி வடிவமைப்பின் மூளையாக அவர் செயல்பட்டார். இந்தியாவின் முதல் உள்நாட்டுச் செயற்கைக்கோள் ஏவூர்தியைத் (எஸ்.எல்.வி. III) தயாரிக்கும் திட்டத்தின் இயக்குநராகக் கலாம் பொறுப்பு வகித்தார்.

இந்திய மண்ணில் இருந்தே நம் செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகளின் நெடுநாள் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் 1979 ஆகஸ்ட் 10 அன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் ஏவப்படும் நொடிக்காகத் தன் குழுவினருடன் கலாம் காத்திருந்தார். கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.

அப்போது கணினி ஆணையா, நம் முடிவா என யோசித்துத் தீர்மானிப்பார்கள். தங்கள் தயாரிப்பின் மீது நம்பிக்கை கொண்ட திட்ட இயக்குநரான கலாம், கணினியின் ஆணையை மீறி செயற்கைக்கோளை ஏவுவதற்கு முடிவெடுத்தார். அது தவறான முடிவு என அடுத்த சில நொடிகளிலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. முதலில் நேராகச் சென்ற செயற்கைக்கோள் பிறகு கட்டுப்பாடின்றிச் சுற்றிச் சுழன்று வங்காள விரிகுடாவில் விழுந்தது. தான் சந்தித்த முதல் தோல்வி அது எனக் கலாம் குறிப்பிடுகிறார்.

வெற்றியைக் கையாள முடிகிற தனக்குத் தோல்வியை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் நின்றதாக இந்தச் சம்பவம் குறித்துப் பின்னாளில் குறிப்பிட்டி ருக்கிறார். ஊடகங்களின் கேள்விகள் விஞ்ஞானிகளைச் சோர்வடையச் செய்துவிடும் என்பதால், அப்போதைய இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

கலாம் தலைமையிலான குழு அடுத்த ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் எனக் கூறினார். அதேபோல் 1980, ஜூலை 18 அன்று உள்நாட்டு ஏவூர்தி மூலம் ரோகிணி செயற்கைக்கோள் விண்ணில் ஏவத் திட்டமிடப் பட்டது. முதல் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால் உலக நாடுகள் பலவும் இந்தியாவைச் சந்தேகக் கண்ணோடும் அவநம்பிக்கையோடும் பார்த்துக் கொண்டிருந்தன.

ஆனால், இந்தியர்களின் திறமையை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக ரோகிணி செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டுப் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. இதன் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டங்களில் முன்னிலை வகித்த நாடுகளின் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்தது.

வெற்றிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்குக் கலாமைத் தலைமையேற்கும்படி சதீஷ் தவான் கேட்டுக்கொண் டார். அந்தச் சம்பவம் குறித்துத் தன் மேடைப்பேச்சிலும் புத்தகத்திலும் நெகிழ்ச்சியோடு கலாம் குறிப்பிட்டிருக்கிறார்: ‘அன்று மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நாங்கள் தோல்வி அடைந்தபோது தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்றபோது அந்தப் பெருமையை எங்கள் குழுவினருக்குக் கொடுத்தார். இந்த நிர்வாகப் பாடத்தை எந்தப் புத்தகத்தில் இருந்தும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அனுபவங்களில் இருந்தே கற்றேன்.” அதற்குப் பிறகு இஸ்ரோவுக்கு ஏறுமுகம்தான். பெரும் பாலான திட்டங்களில் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றிகண்டிருக்கிறது.

| அக்.15 – அப்துல் கலாம் பிறந்தநாள் |