EBM News Tamil
Leading News Portal in Tamil

விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி! | businessman has been feeding peacocks 8 years in Virudhunagar


விருதுநகர்: விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55). விருதுநகர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து மயில்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து போத்திராஜ் கூறியதாவது: மார்க்கெட் கடையில் ஓரளவு நல்ல வருமானம் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் மாடியில் பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன். தினமும் காலையிலும், மாலையிலும் அரிசி, சாதம் மற்றும் மிச்சர் போன்றவை வைப்பேன். இரு வேளையும் தண்ணீர் வைப்பேன். 100-க்கும் மேற்பட்ட காக்கைகள், புறாக்கள், மைனாக்கள் போன்ற பறவைகள் வந்து சாப்பிட்டுச் செல்கின்றன.

ஒருமுறை சிவகாசி சாலையில் சென்றபோது, வயல்வெளியில் தேங்கி நின்ற கழிவுநீரை மயில் குடிக்கச் செல்வதைப் பார்த்தேன். அப்போது, மயில்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதையடுத்து, சிவகாசி சாலையில் வி.வி.ஆர். தோட்டம் அருகே கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து மயில்களுக்கு உணவளித்து வருகிறேன்.

தினமும் காலை 5.30 மணிக்குச் செல்வேன். 2 கிலோ அரிசி, சாதம், அரை கிலோ மிச்சர், ஒரு குடம் தண்ணீர், சில நேரம் நண்பர் கடையில் மீதமாகும் வடையுடன் செல்வேன். தண் ணீர் தொட்டி ஒன்றும் சிறிதாக கட்டி வைத்துள்ளேன்.

என்னைக் கண்டதும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மயில்கள் சப்தமிட்டபடியே ஓடி வரும். மேலும், காக்கைகளும், மைனாக்களும் பறந்து வரும். அரை மணி நேரத்தில் நான் கொண்டுசென்ற அனைத்தும் காலியாகி விடும். வெளியூர் செல்ல நேர்ந்தால், அன்று நள்ளிரவு 12 அல்லது 1 மணிக்குச் சென்று உணவும், தண்ணீரும் வைத்துவிடுவேன்.

கோடை காலத்தில் தண்ணீருக்காக மயில்கள் மிகவும் கஷ்டப்படுவதை பார்த்துள் ளேன். அப்போது, தண்ணீர் கொண்டுசென்று தொட்டியில் ஊற்றியவுடன் மயில்கள் கூட்டமாக ஓடிவந்து பருகும். இதற்கு நன்றி தெரிவிப்பதுபோல் அகவும், தோகை விரித்து ஆடும். இதில் எனக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது என்றார்.