பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை | Once a security guard at Zoho, now their software engineer
புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
இத்தனைக்கும் இவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பட்டப்படிப்பு எதுவும் படிக்காத நிலையில், மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அனைவரும் போற்றும்படியாக பணியாற்றி வருகிறார்.
இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அப்துல் அலிம் கூறியுள்ளதாவது: 2013-ம் ஆண்டு நான் சென்னை வந்தேன். 2 மாதங்கள் சுற்றித்திரிந்து வேலை தேடினேன். பல நாட்கள் தெருவோரத்தில் படுத்து தூங்கினேன். 2 மாதம் கழித்து ராமாபுரத்திலுள்ள சோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டு வேலை கிடைத்தது.
அதன் பின்னர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு மூத்த ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் எனக்கு எச்டிஎம்எல் கோடிங் தெரியும் என்று கூறினேன். அதேநேரத்தில் நான் எந்தவித பட்டப்படிப்பும் தேர்ச்சி பெறவில்லை என்பதையும் தெரிவித்துவிட்டேன்.
பின்னர் அவரின் அனுமதியுடன் சோஹோ நிறுவனத்துக்கு சென்று சாப்ட்வேர் கற்றுக்கொண்டேன். 8 மாதங்களுக்குப் பிறகு புதிதாக செல்போன் செயலியை உருவாக்கினேன். அதை அந்த ஊழியர், நிறுவன மேலாளரிடம் காண்பிக்க அவருக்குப் பிடித்திருந்தது. உடனடியாக நிறுவனத்தில் சேர்க்கப்பட்டேன். இப்போது சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அப்துல் அலிம் கூறியுள்ளார்.
அப்துல் அலிமின் சாதனைப் பயணம் தொடர்பான சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அப்துல் அலிமை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.