நவம்பரில் மெருகூட்டப்பட்ட ‘அரட்டை’ செயலி: சோஹோ ஸ்ரீதர் வேம்பு தகவல் | Zoho Sridhar Vembu informs arattai messenger app to be launch in Nov
புதுடெல்லி: மெருகூட்டப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட அரட்டை செயலி வரும் நவம்பருக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சோஹோ கார்ப்பரேஷனின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உண்மையில் நவம்பர் மாதத்துக்குள் ஒரு பெரிய வெளியீட்டை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அரட்டை செயலியில் கூடுதல் உள்கட்டமைப்பு சேர்க்கப்பட்டாலும், சிக்கல்கள் எழும்போது அவற்றை சரிசெய்ய நிறுவனம் நிரலை புதுப்பித்து வருகிறது. அரட்டை செயலியின் பதிவிறக்கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்ததால், மூன்று நாட்களில் அதன்பயன்பாட்டில் மிகப்பெரிய அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அரட்டைக்கு நாங்கள் இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம். தயவுசெய்து எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி! ஜெய் ஹிந்த். இவ்வாறு வேம்பு பதிவிட்டுள்ளார். முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலியை ஆதரித்து பதிவிட்டிருந்தார்.
அவர் அதில், அரட்டை செயலி @Zoho இலவசமானது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சுதேசியைப் பின்பற்றுவதற்கான பிரதமர் அழைப்பின் பேரில், அரட்டை செயலியின் பயன்பாட்டுக்கு மாறுமாறு கேட்டுக் கொண்டார். சோஹோவால் தொடங்கப்பட்ட அரட்டை செயலி வாட்ஸ்அப் போன்ற தளங்களைப்போல், செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், கதைகளைப் பகிரவும், சேனல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.