கிளவுட் சேவைக்கான செலவுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் டேட்டா வவுச்சர்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு | data voucher for startups to cover expenses for cloud services
சென்னை: கிளவுட் சேவைக்கான செலவுத் தொகைக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை டேட்டா வவுச்சர் வழங்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கிளவுட் உட்கட்டமைப்பு செலவுகளை குறைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைவாக வளர்வதற்கும், எளிதாக புதுமைகளை உருவாக்குவதற்கும் உதவும் வகையில்தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் 2025-26 நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு, திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என 3 ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கிளவுட் சேவைக்கான செலவுத்தொகை திரும்ப வழங்கப்படும். அதேபோல் அமேசான் இணைய சேவை (ஏ.டபிள்யூ.எஸ்), மைக்ரோசாஃப்ட் அஸூர், கூகுள் கிளவுட், ஆரக்கிள், ரயில்டெல், சிஃபி போன்ற முன்னணி உலகளாவிய கிளவுட்சேவை நிறுவனங்களில் 5 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்டணத் தள்ளுபடியும் கிடைக்கும். இத்திட்டத்தின்கீழ் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஐடி என்டி மையம் மற்றும் எல்காட் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களை info@elcot.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டம் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.