காந்தளூர். பெயருக்கு ஏற்றாற் போல் நம்மைக் காந்தம் மாதிரி கவர்ந்திழுக்கும் இயற்கையின் பேரதிசயம்! புகழ்பெற்ற இரைச்சல்பாறை அருவி… வழிந்தோடும் சில்லோடைகள்… எலுமிச்சம் புல் காடு… கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமையான பார்வை மையங்கள்… மலையில் சாகச ஜீப் பயணம்… மண் வீடுகள்… வானுயர்ந்த மரங்கள்… விதவிதமாகப் பறவையினங்கள்… இப்படி இயற்கையை அணு அணுவாக ரசிப்பதற்கு ஏற்ற மலைக் கிராமம்தான் காந்தளூர்!
மூணாறிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இருக்கிறது காந்தளூர்! பேரமைதியான சூழலில் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கேரள மாநிலத்தில் இருக்கும் காந்தளூரைத் தேர்ந்தெடுக்கலாம். சின்னார் வனப்பகுதி வழியாக மூணாறுக்குப் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், காந்தளூருக்குச் செல்ல மறையூரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. பயணிக்க வேண்டும்.
கேரளத்தில் ஒரு காஷ்மீர்: ‘கேரளத்துக் காஷ்மீர்’ என்று சொல்லுமளவுக்குப் பனிக்காலங்களில் மூடுபனி பாதையை மறைத்து நிற்கும்! உடலைச் சில்லிடச் செய்யும் குளிர் புதுமையான உணர்வைக் கொடுக்கும். கேரளத்துக் காஷ்மீரான காந்தளூரில், காஷ்மீரை நினைவூட்டும் ஆப்பிள்களும் விளைகின்றன. கேரளத்திலேயே ஆப்பிள் வளர்ச்சிக்குத் தகுந்த சீதோஷ்ண நிலையைக் கொண்டிருப்பது காந்தளூர்தான். அப்பகுதியின் மண் வளம் மற்றும் ஆப்பிள் மர வளர்ச்சிக்குத் தோதான காலச் சூழல், ஆப்பிள் விவசாயத்துக்கு இடம்கொடுக்கிறது.
காந்தளூரின் ஆப்பிள் தோட்டம்: காந்தளூரின் இயற்கை வனப்பை ரசிப்பதோடு, அங்குள்ள ஆப்பிள் தோட்டங்களையும் அவசியம் பாருங்கள். மரங்களிலிருந்து ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட நீங்கள் காஷ்மீருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை! காந்தளூருக்குப் பயணித்தாலே போதும். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாகச் செயல்படும் சில ஆப்பிள் தோட்டங்களைப் பார்வையிடலாம்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கும் ஆப்பிள் மரங்கள், ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. இந்த மாதங்களில் காந்தளூருக்குப் பயணம் செய்தால் மரத்திலிருந்து ஆப்பிள்களைப் பறித்துச் சாப்பிடலாம். ஆப்பிள் பூக்கும் காலம், ஆப்பிள் காய்க்கும் பருவம், அதன் வளர்ச்சி, அவற்றுக்குத் தேவையான வெப்பநிலை… இவற்றைப் பற்றி ஆப்பிள் தோட்டத்தில் வகுப்பும் எடுக்கிறார்கள். ஒரே இடத்தில் வெவ்வேறு ரக ஆப்பிள்களையும் பார்க்க முடிந்தது.
ஆப்பிளைச் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், நேரடியாக மரங்களிலிருந்து ஆப்பிள்களைப் பறித்துச் சாப்பிடுவது தனித்துவமான அனுபவம்தான். மெழுகுப் பூச்சோ, எவ்வித பதப்படுத்திகளோ பயன்படுத்தப்படாமல் நேரடியாக ஆப்பிள்களை வாங்கிச் சாப்பிடுவதால் அவற்றின் முழுமையான பலன்களைப் பெறவும் முடியும், கூடவே அவற்றின் தனித்துவமான சுவையை உணரவும் முடியும்.
‘தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட மருத்துவரின் தேவை இருக்காது…’ என்பது புகழ்பெற்ற மருத்துவ மொழி. நார்ச்சத்து, எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்கள் போன்றவை ஆப்பிள் வழங்கும் நலக்கூறுகள். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதில் ஆப்பிளுக்கு நிகர் ஆப்பிளே! உடலுக்குத் தெம்பை அளித்து, சோர்வுற்ற உடலை மீட்டெடுக்கும் தன்மையும் ஆப்பிளுக்கு உண்டு.
காந்தளூரில் ஆப்பிள் மட்டுமல்லாமல் ஆரஞ்சு, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் போன்ற பழம், காய் ரகங்களின் விளைச்சலையும் பார்க்க முடியும். காய்களை விவசாய நிலங்களில் இருந்து நேரடியாக வாங்கிச் செல்வதற்காகக் காந்தளூருக்குப் பயணிக்கும் சுற்றுவட்டார மலைக் கிராமத்து மக்கள் இருக்கிறார்கள். காஷ்மீரில் இருக்கும் அளவுக்கு ஆப்பிள் விவசாயம் இங்கு செழித்தோங்கவில்லை என்றாலும், நேரடியாக ஆப்பிள் மரங்களையும் ஆப்பிள்களையும் பார்ப்பது இனிமையான அனுபவம்தான். காந்தளூருக்கு ஒரு சிறப்புப் பயணத்துக்குத் திட்டமிடுங்கள்; காஷ்மீரின் அனுபவங்களை ஓரளவுக்கு உணருங்கள்.
கட்டுரையாளர், சித்த மருத்துவர்.