விஞ்ஞானி, குடியரசுத் தலைவராக மட்டுமல்லாமல் தனிப்பட்ட பண்பு களுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்தியத் தலைவர்களில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முக்கியமானவர். ‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம், இந்தியாவின் மிகப் பெரும் ஆளுமையாக நினைவுகூரப்படுவதற்கு அவரின் கீழ்க்காணும் பண்புகளே காரணம்.
தொலைநோக்குப் பார்வை: கலாம் இந்தியாவை 2020ஆம் ஆண்டுக் குள் ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்; இதற்கென ‘இந்தியா 2020’ என்கிற திட்டத்தை உருவாக்கினார். கலாமின் ‘India 2020: A Vision for the New Millennium’ புத்தகத்தில் விவசாயம், தொழில் நுட்பம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்களை விவரித்தார்.
எளிமை: எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து உயர்ந்த பதவிகளை அடைந்தபோதும், எளிமை யான வாழ்க்கையைக் கலாம் கடைப்பிடித்தார். குடியரசுத் தலைவராகத் தனது தனிப்பட்ட உடைமைகளை மிகவும் குறைவாக வைத்தி ருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபோதும், தனிப்பட்ட செலவுகளை அவர் பெரிதும் குறைத்துக்கொண்டார். இந்தப் பண்பு கலாமுடன் எளிய மக்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள உதவியது.
தேடல்: கலாம் எப்போதும் புதியபுதிய தகவல்களை அறிந்துகொள்வதில், ஆர்வம் மிக்கவர். கலாமின் இப்பண்பே இந்தியாவின் விண் வெளி – பாதுகாப்புத் துறைகளை மேம்படுத்த உதவியது. விஞ்ஞானியாக, கலாம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கினார். அக்னி, பிரித்வி ஏவுகணைகள், கலாம்-ராஜு ஸ்டென்ட் போன்றவை அவர் தேடலுக்குக் கிடைத்த வெகுமதிகள்.
நம்பிக்கை: கலாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், அதை வெற்றியின் படிக்கட்டுகளாகக் கருதினார். எஸ்எல்வி – 3 திட்டத்தின், முதல் தோல்வியைக் கலாம் எதிர்கொண்டபோதும், நம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, 1980இல் அதை வெற்றி பெறச் செய்தார்.
இது இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அக்னி ஏவுகணை திட்டத்தில் பல சவால்களை எதிர்கொண்டபோது, கலாம் தனது குழுவினரை ஒருங்கிணைத்து, ’நாம் தோல்வியடைய வில்லை, நாம் கற்றுக்கொண்டோம்’ என்று கூறி ஊக்கமளித்தார்.
மாணவர் தலைவர்: கலாம் மாணவர்களுடன் நேரம் செலவிடு வதை விரும்பினார். தன்னை ஓர் ஆசிரி யராகவே கருதினார். அதன் பொருட்டே மாணவர்களுடன் உரையாடுவதையும், அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதையும் தனது வாழ்க்கையின் முக்கியப் பணியாகக் கருதி னார். கலாமின் பேச்சுகள் மாணவர்களைச் சிந்திக்கவும் இலக்குகளை அடையவும் தூண்டின.
நேர்மை: இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது, தனது பதவியைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பயன்படுத்தாமல், நேர்மை யுடன் செயல்பட்டார். உறவினர்கள் அவரைச் சந்திக்க டெல்லி வந்தபோது, அவர்களைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க அனுமதிக்காமல், அருகிலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்தார். மேலும், அவர்களின் பயணச் செலவுகளையும் தனது சொந்த வருமானத்திலிருந்து கலாம் செலுத்தினார். – எல்னாரா
| ஜூலை 27: கலாமின் 10-ம் ஆண்டு நினைவு நாள் |