EBM News Tamil
Leading News Portal in Tamil

எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறி புதுச்சேரி வீராங்கனை திவ்யா சாதனை! | Puducherry hiker Divya achieves feat by climbing Mount Elbrus


புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை திவ்யா, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (29). மலையேற்ற வீராங்கனையான இவர், மத்திய பாதுகாப்பு அமைச்சகரத்தின் கீழ் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சியை முடித்தார். மேலும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் (GGIM) அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியைப் பெற்றார்.

இவர், தற்போது ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான, ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் (5,642 மீட்டர் உயரம்) ஏறி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையில் ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார்.

இதுகுறித்து திவ்யா கூறுகையில், “இந்திய இமயமலை தொடர்களில் ஏற்கெனவே ‘அல்பைன் ஸ்டைலில்’ 6,111 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறி முடித்துள்ளேன். இது நான் மலை ஏறிய அதிகபட்சமான உயரமாகும். தற்போது ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான எல்ப்ரஸ் சிகரத்தை ஏறி முடித்துள்ளேன். தொடர்ந்து கார்கிலில் உள்ள 7,077 மீட்டர் உயரமுள்ள குன்மலை மற்றும் 7,135 மீட்டர் உயரமுள்ள நன்மலை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஏற உள்ளேன்.

எல்ப்ரஸ் சிகர சாதனையை தொடர்ந்து, ரஷ்யாவில் இருந்து வரும் 23-ம் தேதி டெல்லிக்கு செல்கிறேன். 26-ம் தேதி கார்கில் குன்மலையில் ஏறுகிறேன். ஆகஸ்ட் 13-ம் தேதி மலை ஏறி முடிக்கிறேன். தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் தேதி நன்மலையில் ஏறி, செப்டம்பர் 2-ல் மலை ஏறி முடிக்கிறேன். இந்த மலைகளை தொடர்ச்சியாக ஏற உள்ள தமிழ் பெண் நானாக இருப்பேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி அசத்தி வரும் மலையேற்ற வீராங்கனை திவ்யா புதுச்சேரியைச் சேர்ந்த அருள் – வள்ளி ஆகியோரின் மகள் ஆவார். இவரை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு மலை ஏற்றத்திற்கான பயணச் செலவாக முதல்வர் நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை முதல்வர் ரங்கசாமியும், புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் இயக்குநரகத்தின் மூலம் ரூ.2 லட்சத்தை அமைச்சர் நமச்சிவாயமும் அண்மையில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.