“10-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்று தகவல் உள்ளது” | 10th Century Kulothunga Chola Inscription Reveals Writing Reform Details
மதுரை: புதுச்சேரியில் ஒலிந்தியாபட்டு திருஅரசிலி உடையார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்றுத் தகவல் உள்ளது என புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தொல்லியல் கழகம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டு கருத்தரங்கம், 35-வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. தொல்லியல் கழக தலைவர் வி.மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். தஞ்சை செயலர் வி.செல்வகுமார் வரவேற்றார். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் சொ.சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால், 35-வது ஆவண இதழை வெளியிட, காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன் இதழை பெற்றார்.
இதில் முன்னாள் பேராசிரியர் விசயவேணுகோபால் பேசியது: “தமிழகத்தில் புதிதாக கண்டறிந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், சிற்பங்கள், நடுகல்கள் ஆகிய தலைப்பில் புதிய வரலாற்றுத் தகவல்கள் ஆவணம் இதழில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 22 கோயில் கல்வெட்டு, பொது இடங்களில் கண்டறிந்த 63 கல்வெட்டு உட்பட மொத்தம் 85 கல்வெட்டுகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
நடுகற்களில் மன்னர்களின் மரபுகளும் உள்ளன, சாதாரண மக்களின் மரபுகளும் உள்ளன. மக்கள் மரபு, அரச மரபு என்ற நிலை இப்போதும் நீடித்து வருகிறது. வெளிநாட்டு பாதிரியார் தான் தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்தார் எனச் சொல்கிறோம். ஆனால் புதுச்சேரியில் ஒலிந்தியாபட்டு என்ற ஊரில் திருஅரசிலி உடையார் கோயிலில் உள்ள 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்றுத் தகவல் உள்ளன.
இத்தகைய கல்வெட்டுகளில் சமூகம், பண்பாடு, அரசியல், மொழி, எழுத்து ஆகிய வரலாறுகள் உள்ளன. இதனை வரலாற்று ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். தற்போது சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை பகுதியில் பேசும்மொழி மாறுவது போல் மன்னர்கள் காலத்திலும் பகுதிக்கேற்றவாறு எழுத்து வடிவமைப்பு இருந்துள்ளது.
பாண்டிய மண்டலத்தில் வட்டெழுத்துபோல், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என அப்பகுதி மக்கள் படிப்பதற்கேற்றவாறு மொழி நடையை எழுதியுள்ளனர். ஒரே மன்னர் காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு மொழிநடையை உருவாக்கியுள்ளனர். தனது ஆட்சியைப்பற்றி மக்கள் அறிந்துகொள்ள மன்னன் கடைபிடித்த அரசியல் உத்தியாகும்” என்று அவர் பேசினார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலை கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் எ.சுப்பராயலு, கல்வெட்டு அறிஞர் சு.ராசகோபால் ஆகியோர் பங்கேற்றனர். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், தொல்லியல் ஆய்வாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.