EBM News Tamil
Leading News Portal in Tamil

நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு… ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன? | Benefits of Consuming ‘Coconut Flower’?


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்…

“சமீப காலமாக ‘தேங்காய் பூ’ என்பது நம்மைச் சுற்றி அதிகப்படியாக காண முடிகிறது. முன்பெல்லாம் வீட்டில் தேங்காய் உடக்கும்போது, அதன் உள்ளே தேங்காய் பூ இருந்தால், அதனை சாப்பிட சிறுவர்கள் ஆர்வமாக இருப்பர். ஏனெனில், அது கிடைப்பது மிகவும் அரிது. இப்போதோ ‘தேங்காய் பூ’ என்பது மிகவும் எளிமையாக கிடைக்கிறது.

இளநீர், தேங்காய் போலவே, தேங்காய் பூவிலும் அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளன. கொப்பரை தேங்காய்களை மூட்டையில் கட்டி, காற்று புகா வண்ணம், மண்ணில் புதைத்து வைப்பதன் மூலம் தேங்காயில் உள்ள நீர் ‘தேங்காய் பூ’வாக மாற்றுகிறது. இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

சித்த மருத்துவர்களின் ஆய்வுகளில், தேங்காய் பூவை சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு நோய் இருப்பவர்களின் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை கலப்பதை தவிர்த்து, ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் நேரத்தை தாமதப்படுத்துகிறது என்பது தெரிய வருகிறது. இதன் மூலம், உடலில் சர்க்கரை அளவு வேகமாக உயராது.

தேங்காய் பூ சாப்பிடுவதால், முழுமையாக உணவு சாப்பிட்ட திருப்தி கிட்டும். மேலும், இதன் மூலம் பசியைத் தூண்டும் உணர்வை சரிசெய்து, உடலில் சர்க்கரை கலக்கும் செயல்பாட்டையும், நிதானப்படுத்த உதவுகிறது.

இப்போது ஒரு கேள்வி எழும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேங்காய், தேங்காய் பூ, இளநீர் சாப்பிடலாமா?

இளநீரில் உடலுக்கு தேவையான தாது வகையான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலானவை உள்ளன. இவை உடலில் நீர் வற்றிப் போகுதலை தடுக்க உதவுகிறது.

குறிப்பாக, தற்போதையச் சூழலில் பருவநிலை மாற்றம் மிகவும் எளிமையாக நடைபெறுகிறது. இதன் மூலம் நமது உடலின் வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும். அதனால், உடலுக்கு தேவையான நீர்ச் சத்து கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. இளநீர் குடிப்பதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான நீர்ச் சத்து உடனுக்குடன் கிடைப்பது மட்டுமின்றி, நமது சருமமும் பாதுகாக்கப்படுகிறது.

இதேபோல், தேங்காய் பூவில் அதிகப்படியாக வைட்டமின்-இ உள்ளது. மேலும், இருப்புச் சத்து உள்ளிட்ட அதிகப்படியான தாதுகள் உள்ளன. இவை நமது சருமத்தை பொலிவாக வைத்துருக்க உதவுகிறது. மேலும், சொரியாசிஸ் போன்ற நோய் உள்ளவர்கள் அதிகப்படியான தேங்காய் பூ உட்கொள்வதன் மூலம் உடலில் இருந்து வியர்வை இயற்கையாக வெளியேற உதவுகிறது.

முகப்பரு உள்ளவர்கள் தேங்காய் பூ உண்டு வந்தால், உடல் சூட்டை குறைத்து பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. நல்ல கொழுப்புகள் அதிகரிப்பதன் மூலம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. மேலும், உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்த உணவுதான் இந்த தேங்காய் பூ.

தேங்காய் பூ உட்கொள்வது மூலம் சிறுநீரகத்தில் கல் (kidney Stone) வருவது தடுக்கப்படுவது மட்டுமின்றி, சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது. தேய்காய் பூவை தயார் செய்ய ரசாயனம் கலப்பது, ஊசி மூலம் தேங்காய் பூ வளர்ப்பது போன்ற எந்த முறையும் கடைப்பிடிப்பது இல்லை.

இன்றையச் சூழலில் தேங்காய் பூ மீதான தவறான புரிதல்கள் அதிகப்படியாக இருக்கிறது. சாதாரணமாக காற்று உட்புகாத வகையில் தேங்காயை மூட்டையாக கட்டி வைத்தாலும், தேங்காய் பூ என்பது எளிமையாக கிடைக்க கூடியது. அதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய தேங்காய் பூவை உண்டு பயன் பெறுவோம்” என்கிறார் மருத்துவர் தீபா.