குமரி – மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம் | Kalamezhuthu Pattu Painting Drawn with Herbal Leaves Powder
நாகர்கோவில்: யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளில் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு, ஓவியம் குமரி – கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
களமெழுத்துப் பாட்டு என்பது கேரளாவில் பாரம்பரியமான ஒரு வழிப்பாட்டு கலை வடிவம். இதில், தரை தளத்தில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணப் பொடிகளால் வரைந்து, அதைப் பாடியும், நடனமாடியும் வழிபடுகிறார்கள். பத்ரகாளி அம்மன், அய்யப்பன், வேட்டக்கொருமகன் போன்ற தெய்வங்களுக்காக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
காலம் செல்ல தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் இந்த வழிபாட்டு முறை மக்கள் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் தற்போதும் இந்த பாரம்பரிய வழிபாட்டு முறை மக்கள் கைவிடாமல் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதியான மீனச்சல் கிராமத்தில் மேலேவீடு பத்திரகாளி அம்மன் கோவிலில் களமெழுத்துப் பாட்டு மூலிகை இலை ஓவியம் பாரம்பரிய வழிபாடு நடைபெற்றது.
இதில் மூலிகை இலைகளால் தயாரித்த வண்ணப் பொடிகளைக் கொண்டு பத்ரகாளி அம்மனின் உருவத்தை கள மெழுத்து பாட்டில் வரைந்து, தெய்வத்தின் புராணங்களைப் பற்றியும் பாடியும், பின்பு ஓவியத்தை அழித்தும் சடங்கை நிறைவு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘தெய்வங்களின் அருளைப் பெறுதல், தோஷங்களை நீக்குதல், மங்களகரமான வாழ்வு அமைதல், கள மெழுத்துப் பாட்டின் நோக்கமாகும். களமெழுத்துப் பாட்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ளது என்பது நமெக்கெல்லாம் பெருமை’ என்றனர்.