சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை: ஆளி விதைகள் தரும் நன்மைகள் என்னென்ன? | From Diabetes to Obesity: What are Benefits of Flax Seeds?
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஆளி விதைகள் (Flax seeds) உகந்தது என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா. இது குறித்து அவர் விவரித்தவை:
“ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் கால்சியம் உள்ளது. குறிப்பாக, ஒரு கிராம் ஆளி விதைகளில் 17.6 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது வகைகள், இருப்புச் சத்து மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளன.
ஆளி விதைகளை உட்கொள்வது மூலம் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவிகரமானது. மண் போல தொற்றம் அளிக்கும் ஆளி விதைகளில் உள்ள Mucilage Substance, வாயில் போட்டு நன்கு மென்று உட்கொள்வதன் மூலம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதுடன், உடலில் சர்க்கரை அளவும் குறைக்க உதவும்.
ஆளி விதைகளை எப்படி உட்கொள்வது? – நேரடியாக வெறுமனே ஆளி விதைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது வறுத்து அரைத்து பொடி செய்து சாலட் வகைகளில் சிறிதளவு தூவியும் சாப்பிடலாம். ஆளி விதைகளை உட்கொள்வது இதயத்துக்கும் நல்லது.
ஒரு வெற்றிலையில் அரை ஸ்பூன் ஆளி விதைகள், அரை ஸ்பூன் சோம்பு, இரண்டு சிட்டிகை ஓமம் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்துக்கு உதவுவது மட்டுமின்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரித்து, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது. அத்துடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
ஆளி விதைகளில் Bioactive Components உள்ளது. குறிப்பாக, Lignin, Alpha Limonene, Phenolic Acid உள்ளிட்டவை உள்ளன. எனவே, ஆளி விதைகளை உட்கொள்வதன் மூலம் நமது உடல் பருமன் குறையும். இதில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் இருப்பதால், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, தினசரி ஒரு ஸ்பூன் ஆளி விதைகள் உட்கொள்வது மூலம் உடலில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த இது துணைபுரிகிறது என்பது தெரியவந்துள்ளது. கொழுப்பு படிதல் மூலம் உடல் வடிவத்தில் மாற்றம் காணப்படும் நபர்கள், குறிப்பாக இடுப்புக்கு கீழ் பகுதிக்கு பருமனாக காணப்படுவர்கள், வயிற்றுப் பகுதி மட்டும் பருமனாக காணப்படும் நபர்கள், ஆளி விதைகளை தினசரி உட்கொண்டால் அதனையும் குறைக்க உதவுகிறது.
பெண்கள் கர்ப்பக் காலங்களிலும், தாய்ப்பால் கொடுக்கும் நேரங்களிலும் ஆளி விதைகள் உட்கொள்ளலாம். தாய்ப்பால் நன்றாக சுரக்கவும் ஆளி விதைகள் உதவுகிறது. இதன்மூலம் குழந்தையின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுகிறது.
பெண்களின் கூந்தல் மென்மையாக இருக்கவும், முடி வளர்ச்சிக்கும் ஆளி விதைகள் உதவுகின்றன. ஆளி விதைகளில் மினரல்ஸ் இருப்பதால், முடியின் வேர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கவும் உதவுகிறது. குறிப்பாக, எலும்பு பிரச்சினைக்கும் ஆளி விதைகள் பெரிதும் உதவுகிறது.
நகைச்சுவை காட்சிகளில் கூறுவது போல், உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தில் குணமாக வேண்டும் என்பது போல், ஆளி விதைகளில் அவ்வளவு சத்துகள் உள்ளன. சிறிதளவு ஆளி விதைகளை வீட்டில் வாங்கி வைத்து, சிற்றுண்டி போல் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நன்மை பயக்கும்.
மேலும், பூசணி விதையுடன் ஆளி விதைகள் உட்கொண்டால், செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. ஆளி விதைகள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது” என்கிறார் மருத்துவர் தீபா.