குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட வயதான புற்றுநோயாளி @ மும்பை | Elderly cancer patient found abandoned by family in trash
மும்பை: இந்தியாவில் ஜன நெருக்கடி அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்று மும்பை. மகாராஷ்டிராவின் தலைநகரான இந்த நகரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி ஒருவருக்கு நரகமாக மாறியுள்ளது. குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் அவர் குப்பையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதுமை பருவத்தில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கைவிட்டது குறித்து நாம் அறிந்திருப்போம். இருந்தாலும் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து, கவனித்து கொள்ளும் பிள்ளைகளும் இங்கு உண்டு. குடும்ப மற்றும் பணி சார்ந்த சூழல் இதற்கு காரணமாக உள்ளது.
இந்தச் சூழலில் மும்பையின் பெருநகர் பகுதியில் ஒன்றாக உள்ள ஆரே பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் வயதான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் கைவிட்டுள்ளனர். அவர் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள கண்டிவலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர். அவர் எப்படி மும்பையின் புறநகர் பகுதிக்கு வந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரைவசிக்காக அவரது பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாமால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த தேசிய புற்றுநோய் நிறுவனம் அவருக்கு உதவ முன்வந்துள்ளது. நாக்பூரில் அமைந்துள்ள தங்களது மருத்துவ நிறுவனத்தில் வைத்து, பூரண புற்றுநோய் சிகிச்சை அளிக்க தயார் என அந்நிறுவனத்தின் சிஇஓ ஷைலேஷ் கூறியுள்ளார். தற்போது அந்த பெண்மணி கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஆரே காவல் நிலைய போலீஸார் கூறியுள்ளனர்.