EBM News Tamil
Leading News Portal in Tamil

ஏலகிரி மலைச்சரிவில் 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு | 5,000-Year-Old Rock Paintings Discovered in Yelagiri Hills


ஏலகிரி: வாணியம்பாடி – ஆலங்காயம் செல்லும் வழியில் ஏலகிரி மலைச்சரிவில் இரும்புக்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்களின் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியரும், தொல்லியல் வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் ஆ.பிரபு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன், செயலாளர் முத்தமிழ்வேந்தன் ஆகியோர் ஏலகிரி மலைச்சரிவில் மேற்கண்ட கள ஆய்வில் இரும்புக்கால மக்களின் பாறை ஓவியம் கண்டெடுத்தனர்.

இது குறித்து பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறியது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் உள்ள 102 ரெட்டியூர் என்ற ஊரின் மேல்புறம் ஏலகிரி மலைச்சரிவில் மக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு குகையில் பாறை ஓவியங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட வனத்துறையின் கவனத்துக்கு அதனைக் கொண்டு சென்றோம்.

பிறகு மாவட்ட வன அலுவலர்களின் உதவியோடு அங்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். ஊரின் மேற்புறம் உள்ள ஏலகிரி மலையில் தரைத்தளத்தில் இருந்து ஏறத்தாழ 1,000 அடி உயரத்தில் இயற்கையாக அமைந்த மலைக் குகையில் மிகப் பெரிய பாறை ஓவியத் தொகுதி அங்கே காணப்படுகிறது. இன்றும் மக்களால் வழிபடப்படும் இக்குகையானது 50 நபர்களுக்கு மேல் தங்கும் அளவுக்கு விசாலமாக உள்ளது. குகையின் முகப்பில் மூன்று தொகுதிகளாகப் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மொத்தமாக 80-க்கும் மேற்பட்ட மனித உருவங்கள் விலங்குகளின்மேல் அமர்ந்து ஆயுதங்களோடு போரிடுவதாக இங்கு காட்டப்பட்டுள்ளது. சண்டையிடும் மனிதர்கள் இருவரின் இடுப்பில் குழந்தையின் உருவங்களும் காட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். இன்னொரு ஓவியத் தொகுதியில் பாய்ந்து வரும் சிறுத்தையினை விலங்கின் மீது அமர்ந்த ஒரு மனிதன் ஆயுதத்தில் தாக்குவதாக வரையப்பட்டுள்ளது.

சிறுத்தை வளைந்த வால்ப் பகுதியோடு அழகாக வரையப்பட்டுள்ளது. சண்டையிடும் மனித உருவங்களின் அருகே ஆங்காங்கே மரங்கள் இருப்பது போலவும் அங்கே கொம்புகளை உடைய அழகிய மான் கூட்டங்கள் குட்டிகளோடு மேய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இன்னொரு தொகுதியில் போரின் வெற்றியைக் கொண்டாடுவது போல நடனமாடக்கூடிய மனிதர்களும் வரையப்பட்டுள்ளன.

இனக்குழுத் தலைவர்களுக்கான உருவங்கள் பிரத்யேகமாகத் தலைகளில் அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு காட்டப்பட்டுள்ளன. பல்லக்கில் அமர்ந்த ஒரு மனிதனை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போல ஓவியமும் வரையபட்டுள்ளது. இந்த ஓவியத் தொகுதிகள் அனைத்தும் விலங்குகளை வேட்டையாடுவதில் ஏற்பட்ட சண்டையாகப் பதிவிடப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெற்றி பெற்றவர்களது கொண்டாட்ட நிகழ்வும், இனக்குழு தலைவனை பல்லக்கில் சுமந்து செல்வது போலவும் வரையப்பட்டுள்ளன.

வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்களின் கரங்களில் ஆயுதங்கள் காட்டப்படுவதால், இவை இரும்புக் காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாடாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிகப் பெரிய பாறை ஓவியத் தொகுதியாக இவை அமைந்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றன. பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர்.

எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். அக்கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவர்களுக்கு அறிவுக்கும் பொருட்டுத் தமது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கலாம்.

அக்கால மனிதர்களின் உள்ளத்தில் தோன்றும் அக உணர்வுகள், அவர்களது வாழ்வியல்அனுபங்களை வெளிப்படுத்தும் ஊடகமே இப்பாறை ஓவியங்களாகும். பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாகக் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப்படுத்திக் கோட்டுருவமாகத் தேவைக்குத் தகுந்தாற்போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன.

இக்குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களை தாங்கியிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியங்கள் தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டு வரலாற்றினையும் அறிந்துகொள்ள உதவும் அரிய முக்கியமான வரலாற்று ஆவணமாகும். தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிக நீளமான பாறை ஓவியத் தொகுதி ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் என்பதால் இதை மாவட்ட தொல்லியல் துறை பாதுகாக்க ஆவணம் செய்ய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.