EBM News Tamil
Leading News Portal in Tamil

ரூ.1,120-க்கு மனைவிக்கு தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர் – நகைக் கடைக்காரர் தந்த ‘அன்பு பரிசு’ | 93-year-old man buys Mangalsutra for wife, viral video


மகாராஷ்டிரா: தள்ளாத வயதிலும் மனைவிக்காக தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறார். நகைக் கடைக்காரர் அன்புடன் ரூ.20 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்ட வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்த வெள்ளை நிற வேட்டி மற்றும் தொப்பி அணிந்த 93 வயதுடைய முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் 2 தினங்களுக்கு முன்பு ஒரு நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்த தம்பதியின் பாசப் பிணைப்பாலும் பணிவான நடத்தையாலும் ஈர்க்கப்பட்ட நகைக் கடைக்காரர் அவர்களுடன் கணிவாக உரையாடி உள்ளார். அப்போது மனைவிக்கு தாலி செயின் வேண்டும் என முதியவர் கூறியுள்ளார். முதலில், கடை ஊழியர்கள் அந்த முதியவரும் அவரது மனைவியும் உதவி கேட்க அங்கு வந்ததாக நினைத்தனர்.

பின்னர், ‘எவ்வளவு பணம் வைத்திருக்கிறீ்ர்கள்’ என கடைக்காரர் கேட்க, அந்த மூதாட்டி ‘ரூ.1,120 ரொக்கம்’ இருப்பதாகக் கூறியுள்ளார். கடைக்காரர் புன்னகையுடன் ‘இவ்வளவு பணமா’ என்றார். இது போதுமானதாக இல்லை என்று உணர்ந்த முதியவர், தனது பையில் இருந்த நாணயங்கள் அடங்கிய 2 பண்டலை எடுத்துள்ளார்.

நகைக்கான முழு பணத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு பதில், கடை உரிமையாளர் இருவரிடமிருந்தும் தலா ரூ.10 வீதம் ரூ.20-ஐ மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இது தம்பதியின் பாசப் பிணைப்புக்கான அன்பின் பரிசு எனக் கூறி நகையை வழங்க உத்தரவிட்டார். இதனால் மனம் நெகிழ்ந்த அந்த தம்பதி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

பின்னர் கடை உரிமையாளர் கூறும்போது, “இந்த தம்பதியின் மூத்த மகன் உயிரிழந்துவிட்டார். இளைய மகன் மது பழக்கத்துக்கு அடிமையாக உள்ளார். இதனால், இந்த தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். ஆனாலும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கின்றனர்” என்றார். தாலி செயினை அந்த முதிய தம்பதிக்கு பரிசளித்த கடைக்காரரும், கள்ளம் கபடம் இல்லாத தம்பதியரின் சிரிப்பும் பார்போருக்கு மகிழ்ச்சியை பரிசளிக்கிறது.