வாணியம்பாடி எனும் பெயரை உச்சரித்ததும், உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது சுவைமிக்க, தனித்துவமான பிரியாணி! கூடவே அங்கு மற்றொரு சிறப்புச் சிற்றுண்டியும் இருப்பதைப் பிரியாணியைச் சுவைத்தவர்கள் நன்கறிவார்கள். பிரியாணியோடு இலவச இணைப்பாக வழங்கப்படும் அந்த இனிப்பு ஃபிர்ணி (Phirni).
ஒவ்வோர் ஊர் பிரியாணிக்கும் துணையாக ஓர் இனிப்பு வழங்கப்படுவது வாடிக்கை. பிரியாணிக்குத் தோதாக வழங்கப்படும் இனிப்பு, பிரியாணி சாப்பிட்ட பின்பு இறுதியில் பலரது நாவைச் சப்புக்கொட்ட வைக்கும். பொங்கல், சேமியா பாயசம், பிரெட் அல்லா… இப்படிப் பல வகைகள் இருக்க, வாணியம்பாடி பிரியாணிக்கான துணை இனிப்பு ஃபிர்ணி.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கிறது வாணியம்பாடி. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் இருக்கும் நகரம் இது. தோல் தொழிலுக்குப் பெயர்போன வாணியம்பாடியின் உணவு ரகங்களுக்கு வரலாற்று பின்னணி உண்டு. பயணம் மேற்கொள்பவர்கள் வாணியம்பாடியின் பிரியாணி – ஃபிர்ணியைச் சுவைப்பதற்காகவே வாணியம்பாடி நகரத்துக்குள் வாகனத்தைச் செலுத்துவார்கள். வாணியம்பாடியில் எண்ணிலடங்கா உணவகங்கள் பிரியாணி – ஃபிர்ணியைப் பரிமாறுகின்றன.
பாயசம் போன்ற இனிப்பு: பார்ப்பதற்குப் பாயசம் போல இருக்கும் ஓர் இனிப்பு ரகம்தான் ஃபிர்ணி. பால், சர்க்கரை, கோவா, அரிசி மாவு, ஏலக்காய் ஆகியவற்றின் துணையோடு தயாரிக்கப்படும் இனிப்பு இது. அரிசி மாவு சேர்க்கப்படுவதால் ஃபிர்ணி கொஞ்சம் கெட்டியான இனிப்பாக இருப்பதை உணரலாம். பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ட வைப்பதால் இனிப்புக்கு மஞ்சள் நிறம் கிடைக்கிறது. உடைத்து வைத்த பருப்பு ரகங்களை மேற்தூவி கொடுக்க, பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறத் தொடங்குகிறது.
பிரியாணியைச் சாப்பிட்டு முடித்த பிறகு, பால் மணம் மிகுந்த ஃபிர்ணியைச் சுவைக்க, நா முழுவதும் இனிப்பு படர்கிறது. சில உணவகங்களில் ஃபிர்ணியைப் பனிக்கூழ் போல, சிறிய மண் பானையில் கொடுக்கிறார்கள். அதில் சாப்பிடும் அனுபவம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
விழாக்களில் பிரியாணியோடு ஃபிர்ணி நீக்கமற இடம்பிடிக்கிறது. ரமலான் போன்ற பண்டிகைக் காலத்தில் ஃபிர்ணியின் விற்பனையும் வாணியம்பாடியில் களைகட்டுகிறது. ஒரு ஃபிர்ணியின் விலை நாற்பது ரூபாய்.
ஆஃப்கன் ஃபிர்ணி: ஃபிர்ணியில் பல்வேறு ரகங்களும் உண்டு. முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, குங்குமப்பூ, ரோஜா இதழ்கள், ரவை, நெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபிர்ணிகளும் வழக்கத்தில் உள்ளன. ஆஃப்கன் நாட்டில் சோள மாவை வைத்து ஃபிர்ணி தயாரிக்கப்படுகிறது. வாழைப் பழங்களை வைத்து தயாரிக்கப்படும் ஃபிர்ணி அங்கு மிகப் பிரபலம்.
இப்போது ரெடிமேடாக ஃபிர்ணியைத் தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றன. அதை வைத்து ஃபிர்ணியை நம் விருப்பத்துக்கு ஏற்ப வீட்டிலேயும் தயாரித்துப் பார்க்கலாம். ஆடையெடுக்காத பாலை வைத்து தயாரிப்பது ஃபிர்ணியின் சுவைக்கு உறுதுணையாக இருக்கும் என்கின்றனர்.
இனிப்புச் சுவை இழையோடும் ஃபிர்ணியை நீரிழிவு நோயாளர்கள் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. கலோரி கொடுக்கும் இனிப்பு என்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் தவிர்க்கலாம். மற்றபடி ஃபிர்ணியில் சேரும் பால் மற்றும் பருப்பு ரகங்கள் சுவையோடு சேர்த்து சுண்ணச் சத்தையும், பல நுண்ணூட்டங்களையும் வழங்கும். உடல் மெலிந்தவர்கள், அடிக்கடி சோர்வுறுபவர்கள் உற்சாகம் அளிக்கும் சிற்றுண்டியாக ஃபிர்ணியை அடிக்கடி சாப்பிடலாம்.
பண்டிகை நேரத்தில் ஜொலிக்கும் வாணியம்பாடி நகரத்துக்குள் சென்று, பண்டிகை குதூகலத்துடன் மண் குடுவையில் ஃபிர்ணியை ருசிப்பது அலாதியான அனுபவம்தான்!
– கட்டுரையாளர், சித்த மருத்துவர்.