ஏஐ மூலம் செயல்படும் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவி ‘ரெனாலிக்ஸ்’ அறிமுகம் | Renalyx launches first indigenous AI based smart hemodialysis machine
ஏஐ மூலம் செயல்படும் உலகின் முதல் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை ‘ரெனாலிக்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
சிறுநீரகப் பராமரிப்பு கருவி தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ரெனாலிக்ஸ் ஹெல்த் சிஸ்டம்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரெனாலிக்ஸ் ஆர்.எக்ஸ்.டி. 21 என்ற ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கிளவுட் தளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதை தொலை தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இயக்க முடியும். மருத்துவ கண்காணிப்பும் சாத்தியம்.
இதன் ஆரம்ப விலை ரூ.6.7 லட்சம். இது இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்தின் விலையை விட 40% குறைவு. இதனால், கிராமப்புற மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புற மக்களும் டயாலிசிஸ் சிகிச்சையை பெற முடியும்.
இதுகுறித்து ரெனாலிக்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குநரான டாக்டர் ஷ்யாம் வாசுதேவ ராவ் கூறும்போது, “அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.800 கோடியை முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். 2025-26 நிதி ஆண்டில் 5 ஆயிரம் கருவிகளைத் தயாரிக்கவும் 2027-28 நிதி ஆண்டில் கூடுதலாக 1,500 கருவிகளை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பையில் ஆலைகள் உள்ளன. எங்கள் கருவியின் விலை குறைவாக இருப்பதால் ஏழை நோயாளிகளும் பயன்பெற முடியும். இது சிறுநீரகப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் சிறுநீரக சுகாதார உள்கட்டமைப்பு வலுப்பெறும்” என்றார்.