சூடாமணி புத்த விகாரில் அகழாய்வு செய்ய ட்ரோன் மூலம் சர்வே பணி தொடக்கம்! | Drone survey work begins to excavate Chudamani Buddha Vihara in nagapattinam
நாகப்பட்டினம்: சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுக்கும் விதமாக, நாகையில் பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் காலத்துக்கு சாட்சியாக உள்ள சூடாமணி புத்த விகாரில் அகழாய்வு செய்ய முதற்கட்டமாக ட்ரோன் மூலம் சர்வே செய்யும் பணியை தமிழக அரசு நேற்று தொடங்கியுள்ளது. நாகையில் கி.பி. 10 முதல் 13-ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புத்தம், சமண, சமயங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
அதன்படி, கிடாரம் (தற்கால வடக்கு மலேசியா) பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரத்துக்காக சோழ நாட்டின் நாகை துறைமுகத்துக்கு வந்திறங்கியபோது, அங்கு பாதுகாப்பாக தங்குவதற்கும் வழிபாடு நடத்துவதற்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் அனுமதியுடன் புத்த விகார் கட்டப்பட்டது.
இந்த சூடாமணி புத்த விகார் நாகையில் தற்போது உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டது என்றும், இதுதொடர்பாக ஆனைமங்கலம் செப்பேட்டில் குறிப்புகள் உள்ளன எனவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும், ராஜராஜ சோழன் எனும் அருண்மொழிவர்மன் உடல் நலம் குன்றி இருந்தபோது, சூடாமணி புத்த விகாரின் கீழ் நிலவறையில் புத்த துறவிகள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக பொன்னியின்செல்வன் வரலாற்று கதையிலும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் இருக்கும் மூடப்பட்ட சுரங்கப் பாதையைத் திறந்து தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த சூடாமணி புத்த விகாரின் நிலவறை குறித்த உண்மை தெரியவரும். சோழ சாம்ராஜ்யத்தின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்படும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதையடுத்து, நாகையில் உள்ள சூடாமணி புத்த விகார் உள்ளிட்ட 8 இடங்களை அகழாய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. தொடர்ந்து, தமிழர்களின் தொன்மைகளை மீட்டெடுக்கும் வகையில் நேற்று நாகையில் புதுப்பிக்கப்பட்ட பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி புத்த விகாரை ட்ரோன் மூலம் சர்வே செய்யும் முதற்கட்ட பணியை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அகழாய்வுக்கு ஏதுவாக ட்ரோன் மூலம் சர்வே செய்த தொல்லியல் துறை இணை இயக்குநர் டாக்டர் சிவானந்தம், பேராசிரியர் முத்து சங்கர், தொல்லியல் அலுவலர் வசந்தகுமார் ஆகியோர் அதன் பகுப்பாய்வுகளை தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, தமிழக அரசு அதற்கான நிதி ஒதுக்கி 4 மாதங்களுக்கு பின்னர் சூடாமணி புத்த விகார் அகழாய்வு பணியை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.
நாகையில் உள்ள சூடாமணி புத்த விகார் உள்ளிட்ட சோழர்கால தமிழர்களின் வரலாற்று சுவடுகளை தொல்லியல் துறை மூலமாக தமிழக அரசு மீட்டெடுத்து வரும் செயல் வரலாற்று ஆர்வலர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.