EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஓய்வுக்கு முன்பாக விராட் கோலியிடம் பேசினேன்’ – மனம் திறக்கும் ரவி சாஸ்திரி | virat kohli spoken with me before test retirement announcement says ravi shastri


டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முன் தான் கோலியுடன் உரையாடியதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அப்போது கோலி தனது முடிவில் தெளிவாகவே இருக்கிறார் என்பதும் அவர் ஓய்வு பெற சரியான நேரம் இதுவே என்பதும் புரிந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கோலி – ரவி சாஸ்திரி கூட்டணிதான் இந்திய அணியின் டெஸ்ட் எழுச்சிக்குப் பெரிய காரணமாக அமைந்தது. இருவரும் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தனர், சிறந்த பந்து வீச்சாளர்கள், நல்ல துணைப் பயிற்சியாளர்கள் என்று இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 நிலைக்கு இட்டுச் சென்றதில் விராட் கோலி – ரவி சாஸ்திரி பங்களிப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலிக்கு எந்த வருத்தங்களும் இல்லை என்று தான் பேசிய அளவில் தெரிந்தது என்றார் ரவி சாஸ்திரி. “விராட் கோலியிடம் ஓய்வுக்கு முன்பு அது தொடர்பாகப் பேசினேன். அவர் மனதளவில் தெளிவாகவே அந்த முடிவை எடுத்துள்ளார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளார்.

அவருக்கு ஓய்வு குறித்து வருத்தங்கள் இல்லை. நான் ஒன்றிரண்டு கேள்விகளை அவரிடம் கேட்டேன். அது ரகசிய உரையாடல். அப்போது அவருக்கு ஓய்வு பெறலாமா, வேண்டாமா என்ற தயக்கமெல்லாம் இல்லை. தெளிவாகவே இந்த முடிவை எடுத்ததாக என்னிடம் கூறினார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, ‘சரி இதுவே ஓய்வுக்கு சரியான தருணம்’ என்று நான் நினைத்தேன்.

அவருக்கும் வருத்தங்கள் இல்லை. ஆனால் அனைவரும் அவர் தொடர்ந்து ஆட வேண்டும் என்றுதான் விரும்பினர். ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் பங்களிக்க முடியும் என்று உறுதியாக கோலி நம்புகிறார். தொழில்முறை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஆடுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு குறித்து அவருக்கு வருத்தங்கள் இல்லாததற்குக் காரணம், அவர் பங்களிப்பு அபாரமானது, அனைத்தையும் அவர் அளித்து விட்டார் என்பதாலேயே இருக்கலாம். தனிப்பட்ட முறையில் பவுலரோ, பேட்டரோ, தன் வேலை முடிந்து விட்டால் முடித்துக் கொள்வர். ஆனால் கோலி அப்படியல்ல, அணி களமிறங்கி விட்டால் போதும் தானே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும், தானே அனைத்துக் கேட்ச்களையும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கேப்டன். அவர்தான் களத்தில் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.

இத்தனை ஈடுபாடு இருக்கும் போது ஏதோ ஒரு இடத்தில் போதும் என்ற நிலை ஏற்பட்டு விடும், ஆடுவது, ஓய்வு குறித்து அவர் பிரித்துப் பார்த்து அனைத்து வடிவங்களிலும் ஆட வேண்டும், அப்படிச் செய்யவில்லை எனில் அலுப்புத் தட்டி விடும், களைப்பு ஏற்பட்டு விடும். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இது துரதிர்ஷ்டமே, அவர் இன்னும் 2 ஆண்டுகள் ஆடியிருக்கலாம் என்பதே என் விருப்பம்.

ஆனால், அவர்தான் பாஸ். அவருக்கு இது போதும் என்று தெரிந்தால் அவ்வளவுதான். அதோடு போதும். கடந்த 10 ஆண்டுகளில் அவருக்கு கிடைக்காத புகழாரங்களே இல்லை, இந்த 10 ஆண்டுகளில் அவரைப் பின் தொடரும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் அவரைப் பார்ப்பதற்கென்றே தனிக்கூட்டம் கூடும்.

அவர் சில வேளைகளில் சீண்டவும் செய்வார். அதனால் அவர் மீது ரசிகர்களில் சிலருக்குக் கோபமும் ஏற்படும். களத்தில் அவர் கொண்டாடும் விதம் அலாதியானது. அவரது கொண்டாட்டம் விரைவில் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆகவே அவரது ஆளுமை விரைவில் தொற்றக்கூடியது. இந்த ஒன்று என் நினைவில் அவரை நீண்டகாலம் தக்க வைக்கும்.” என்றார் ரவிசாஸ்திரி.