ஐபிஎல் அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்க்கலாம்: விதிகள் சொல்வது என்ன? | ipl teams can replace new foreign players temporarily for withdrawal players rules
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், தேதிகள் மாற்றப்பட்ட காரணத்தால் விளையாட முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்றாக வேறு வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் சேர்க்கலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அந்த புதிய விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
மே 17 முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த மாற்றம் காரணமாக பல்வேறு அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள், தாயகத்துக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.
இவர்கள் எஞ்சியுள்ள ஆட்டங்களை பகுதி அளவிலும் அல்லது முழுவதும் மிஸ் செய்வார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பி விட்டனர். இந்த நிலையில் தான் புதிய விதியை கொண்டு வந்துள்ளது ஐபிஎல் நிர்வாக குழு.
அதாவது எஞ்சியுள்ள ஆட்டங்களில் பங்கேற்று விளையாட முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்றாக வேறு/பிற வெளிநாட்டு வீரர்களில் அணிகள் சேர்த்து கொள்ளலாம். இருப்பினும் இந்த ஒப்பந்தம் இந்த சீசனுக்கானதாக மட்டுமே இருக்கும். அடுத்த சீசனில் அவர்கள் அந்த அணிக்காக விளையாட முடியாது. அடுத்த சீசனில் மீண்டும் அவர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள். அதன் மூலமாக அவர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் ஆட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரேசர் மெக்கர்குக்கு மாற்றாக வங்கதேசத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். தாற்காலிகமாக டெல்லி அணியில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த சீசனில் டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட வீரராக தொடர முடியாது. ஆனால், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் டெல்லி அணியில் தக்கவைக்கப்பட்ட வீரராக விளையாட முடியும்.