பொதுவுடைமைச் சமூகத்தில் உணவுப் பகிர்தல் தொடங்கிய போது, பகிரப்பட்ட உணவு வகைகளை வைத்துச் சாப்பிட மரத்தின் அகன்ற இலைகள் கலமாகப் பயன்பட்டிருக்கும். இதன் நீட்சியாக வாழை இலை, பாக்கு மட்டை, தாமரை இலை என வெவ்வேறு இலைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப வெவ்வேறு கலங்கள் உணவைச் சாப்பிடுவதற்கு ஆதாரமாகப் பயன்பட்டிருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நெகிழித் தட்டுகளைக்கூட முயற்சி செய்து, அவை கொடுத்த பாதிப்புகளின் காரணமாக அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டோம். ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இப்போது இருக்கிறது. இவை ஒருபுறம் இருக்க, நாம் மறந்த உணவுக் கலங்களில் மிக முக்கியமானது மண்ணால் செய்யப்பட்ட கலங்கள்! மண்பானை செய்யும் தொழில் உயிர்ப் பெற்ற காலக்கட்டத்தில், மண் பாத்திரங்கள் பெருமளவில் உணவு சமூகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கும்! இன்றும்கூட கிராமங்களில் மண்ணாலான கலங்களில் உணவு வகைகளைச் சமைப்பதையும், சாப்பிடுவதையும் பார்க்க முடிகிறது. மண் பானைகளில் சமைத்துச் சாப்பிடும் ஆசையும், மண்பானை உணவகங்களைத் தேடும் மனநிலையும் இப்போது பெரும்பாலானோருக்கு அதிகரித்து இருக்கிறதுதானே!
சட்டிச் சோறு
கலங்கள் சார்ந்து கிடைக்கும் சிறப்பு உணவு வகைகளுள் கேரளத்துப் பகுதிகளில் கிடைக்கும் ‘கேரளத்துச் சட்டிச் சோறு’ பிரசித்தி பெற்றது. வயநாடு பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, அங்கிருந்த கிராமம் ஒன்றில் சட்டிச் சோறைச் சாப்பிட ஆயத்தமானோம்! மண்ணால் ஆன தட்டு. குழம்பு, சாம்பார், ரசத்துக்கு எனக் குட்டி மண் சட்டி. சாதத்தைத் தாங்கிக் கொள்ள பெரிய மண் சட்டி. இப்படித்தான் சட்டிச் சோறு எங்கள் உணவு மேசையை நிரப்பும் என்கிற எண்ணத்துடன் அமர்ந்திருந்தோம்!
ஆனால், எங்கள் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில், ஒரே ஓர் அகன்ற மண் சட்டியில் மதிய உணவுக்குத் தேவையான சோறு, குழம்பு, பொரியல், அவியல், ரசம், அப்பளம், ஊறுகாய், இறைச்சித் துண்டு என ஒட்டுமொத்தமாக மேசையில் வந்திறங்கியது.
கேரளத்து மட்டையரிசி சட்டியின் மையத்தில் இடம்பிடித்திருந்தது. அதற்கு அடியில் கொஞ்சம் குழம்பு. சாதத்தைச் சுற்றி கிழங்கு அவியல். அந்தப் பகுதியில் விளையும் காய்களில் பொரியல், கூட்டு. நார்த்தங்காய் ஊறுகாய். நடுவில் மீன் துண்டு எனப் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுவதாக இருந்தது!
அசைவ சட்டிச் சோறு ஆர்டர் செய்தால் இறைச்சிக் குழம்பும், இறைச்சித் துண்டும் இடம்பெறும். அவரவர் விருப்பதுக்கு ஏற்ப அசைவ ரகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். சைவ சட்டிச் சோறில் கூடுதலாகப் பொரியல், கூட்டு இடம்பெறுகிறது.
கலவை சாத உணர்வை வழங்கும் சட்டிச் சோறு
திருவிழா நாள்களில் கலவை சாதம் சாப்பிடும் பழக்கம் இப்போதும் பெரும்பாலான வீடுகளில் பின்பற்றப்படுகிறது. அதாவது சாதத்தில் பொரியல், பச்சடி, காரக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட வித்தியாசமான சுவையை இந்தக் கலவை சாத விருந்து வழங்கும். அதே வகைமையில் இந்தச் சட்டிச் சோறையும் இணைக்கலாம்.
மட்டை அரிசிக்குக் கீழிருக்கும் குழம்பைப் பிசைந்துகொண்டு, பக்கவாட்டில் இருக்கும் கிழங்கு, காய்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துச் சாப்பிட அற்புதமான விருந்தாக இருந்தது! சுடு சாதமும் சூடான குழம்பும் மண் சட்டியின் மணத்தை நாசிக்குள் பரப்பியது. அதாவது மண் வாசனையோடு மண் மனம் சார்ந்த உணவைக் கேரளத்துச் சட்டிச் சோறு வழங்கியது.
ஒரு சட்டிச் சோறு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடுகிறது. கூடுதலாகச் சாதம் தேவைப்பட்டாலும் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இப்போது பெரும்பாலான உணவகங்களில் கேரளத்து சட்டிச் சோறு கிடைக்கிறது. இருப்பினும் கேரளத்து கிராமம் ஒன்றில் மழை பெய்துகொண்டிருக்கும் போது சாப்பிட்டுப் பாருங்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்.
drvikramkumarsiddha@gmail.com