EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு | ICC Test Championship Final Australia cricket team announced


மெல்பர்ன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இளம் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியில் கடைசி இரு ஆட்டங்களில் அறிமுக வீரராக இடம் பெற்ற இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

முதுகு வலி காயத்துக்காக கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் முழு உடற்தகுதியை எட்டியதை தொடர்ந்து அணிக்கு திரும்பி உள்ளார். பிரதான சுழற்பந்து வீச்சாளராக நேதன் லயன் உள்ள நிலையில் 2-வது சுழற்பந்து வீச்சாளராக மாட் குஹ்னெமன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் இதே ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25-ம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கிரனடாவிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவிலும் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான காட் கம்மின்ஸ் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் தேசிய அணிக்கு திரும்பி உள்ளனர்.

இவர்களுடன் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலந்து ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளரான தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாகெட் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், கவுண்டி கிரிக்கெட் போட்டியில் துராம் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். முதல் இரு போட்டிகளில் பிரெண்டன் டாகெட் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலி அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட். மாற்று வீரர்: பிரெண்டன் டாகெட்.

மீண்டும் ரபாடா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் போதை மருந்து விவகாரத்தில் சிக்கி ஒருமாதம் தடையை அனுபவித்த வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவும் சேர்க்கப்பட்டுள்ளார். அணி விவரம்:

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், மார்கோ யான்சன், கார்பின் போஷ், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், காகிசோ ரபாடா.