டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு: பிசிசிஐ-யிடம் விராட் கோலி ‘பகிர்ந்த’ விருப்பம்! | Test cricket retirement: Virat Kohli shares wish with BCCI
இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். இதில் 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியில் கோலி 100 ரன்கள் எடுத்தார். ஜூலை 2023-க்குப் பிறகு கோலி டெஸ்ட்டில் எடுத்த முதல் சதமாக அது அமைந்தது. 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் 254 ரன்கள் எடுத்ததுதான் அவரது கரியர் பெஸ்ட் ஸ்கோர். கடைசி 2 வருடங்களாக அவரது சராசரி 32-ஐ த் தாண்டவில்லை.
இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் அனுபவம் இந்திய அணிக்குக் கைகொடுக்கும் என்று அவரை அணியில் தக்க வைக்க முடிவு செய்துள்ளனர், ஆனால், அவரோ ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்து விட்டார். கடைசி பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் கோலி, ரோஹித் இருவருமே இருந்தனர். ரோஹித் ஏற்கெனவே ரிட்டையர் ஆகிவிட்டார், அஸ்வினும் ஓய்வு பெற்று விட்டார். கம்பீருக்கு இங்கிலாந்து அனுபவம் போதாது, எனவே விராட் கோலி அவசியம் தேவை என்று தேர்வுக்குழுவினர் உணர்கின்றனர்.
இந்தியாவின் ஆகச் சிறந்த கேப்டன் என்றால் அது விராட் கோலிதான் என்று தைரியமாக, தோனி ரசிகர்கள் எரிச்சலடைந்தாலும் பரவாயில்லை என்று கூற முடியும். 68 டெஸ்ட்களில் கேப்டனாக இருந்த கோலியின் தலைமையில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகளில் மட்டும்தான் தோற்றுள்ளார். தோனி 60-ல் 27 வென்றுள்ளார், கங்குலி 49-ல் 21-ல் வென்றுள்ளார்.
கோலியின் பெரிய சாதனை என்னவெனில், கேப்டனாக உலக அளவில் 4-வது சிறந்த கேப்டனாக கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
2014-ல் இங்கிலாந்தில் சொதப்பினாலும் பேட்டிங்கில் 2018-ல் இரு அணிகளிலும் டாப் ஸ்கோர் எடுத்த வீரராக இருந்தார் விராட். 583 ரன்களை 59.30 என்ற சராசரியில் எடுத்தார். இதோடு ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஒருமுறை கூட ஆட்டமிழக்கவில்லை.
இந்நிலையில், விராட் கோலி இங்கிலாந்தில் ஆடினால் நன்றாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். அவரிடமே கேப்டன்சியைக் கொடுத்து கடைசியில் ஒரு நல்ல கேப்டன் கையில் இங்கிலாந்துக்கு சவால் அளிக்க வைக்கலாம் என்பதே நம் விருப்பம்.