ஐபிஎல் போட்டி தற்காலிகமாக தள்ளிவைப்பு: அணி நிர்வாகங்கள் சொல்வது என்ன? | IPL 2025 suspended for one week as military tensions escalate
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவை தேசத்துக்கு முன்னுரிமை என்று ஐபிஎல் அணிகள் நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன வந்தன.
எல்லையில் போர்ப்பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் இரவு, இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ-யால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் இடையே போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் கேட்டதாகவும், பெரும்பாலான வீரர்கள் தற்போது போட்டிகளில் விளையாடுவது குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே போட்டிகளை தற்காலிகமாக தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியை சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் நடைபெற வேண்டும். மீதமுள்ள 16 போட்டிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:
விளையாட்டை விட தேசம்தான் முக்கியம். மற்ற எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம். நமது ஒவ்வொரு அடியிலும் தைரியம் உள்ளது. ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் பெருமை. நமது பாதுகாப்புப் படைகளுக்கு வணக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “தேசத்துக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியான நேரத்தில், நமது இந்திய பாதுகாப்புப் படைகளின் அசைக்க முடியாத தைரியத்தையும் துணிச்சலையும் நாங்கள் வணங்குகிறோம். மேலும் இந்தியாவில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். ஜெய் ஹிந்த்” என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் எங்கள் பாதுகாப்புப் படைகளுடன் வலிமையுடன், ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்கிறோம். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் பாதுகாப்புப் படைகளுடன் நேற்று.. இன்று.. நாளை.. என்றென்றும் ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “உயர்ந்து நின்று, நம் அனைவரையும் பாதுகாக்கிறது நமது இந்திய ஆயுதப் படைகள். இந்திய மக்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு கேடயமாக. தேசம்தான் நமக்கு முன்னுரிமை. அதற்குப் பிறகுதான் விளையாட்டு” என்று பதிவிட்டுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாதுகாப்புப் படைகளுக்குத் துணையாக இன்றும், என்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம். ஜெய் ஹிந்த்” என்று கூறப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாதுகாப்புப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நாங்கள் தலை வணங்குகிறோம்” என்று கூறியுள்ளது.