EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐபிஎல் 2025 சீசன் ஒரு வாரத்துக்கு நிறுத்தம்: இந்தியா – பாக். போர்ப் பதற்றத்தால் ஒத்திவைப்பு | The remainder of ongoing IPL 2025 suspended with immediate effect for one week


புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று (மே.9) அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” எனத் தெரிவித்துதார்.

“நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு: அந்த அதிகாரபூர்வ அறிவிப்பில், “நடப்பு ஐபிஎல் 2025 தொடர் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த முடிவு ஐபிஎல் நிர்வாகக் குழுவுடன் அதன் பங்குதாரர்கள் நடத்திய முறையான ஆலோசனைக்குப் பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உரிமையாளர்களும் வீரர்களின் உணர்வுகள், மற்றும் ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் உணர்வுகளை முன்வைத்து இந்த முடிவை பரிந்துரைத்தனர்.

நமது படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகவும் செயல்படுவது விவேகமானது என்று வாரியம் கருதியது. அதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, நமது படைகள் மற்றும் நாட்டு மக்களுடன் நாங்கள் ஒன்றுபடுவதை வெளிப்படுத்துகிறோம். அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உறுதியான பதிலடி கொடுத்து, ​​ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டைப் பாதுகாத்துவரும் நமது படைகளின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு வாரியம் மரியாதையை உரித்தாக்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியா – பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.