மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அணியில் உள்ள வீரர்களுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் நள்ளிரவை கடந்த பின்னரே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2-வது முறையாக இந்த குற்றச்சாட்டில் மும்பை அணி சிக்கியுள்ளதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை அணியில் உள்ள மற்ற வீரர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையில் எது குறைவாக இருக்கிறதோ அதை வீரர்கள் கட்ட வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறியதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டி மழையால் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஆஷிஷ் நெஹ்ரா நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரத்திலேயே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.