EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசல்: இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேற்றம்! | Jemimah Rodrigues hits century: Indian women’s team advances to final


இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டுள்ள 3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.

தனது 2-வது சதத்தை விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 123 ரன்களும், தீப்தி சர்மா 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்களும் விளாசினர். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28, பிரதிகா ராவல் 1, ரிச்சா கோஷ் 20, அமன்ஜோத் கவுர் 5, ஸ்ரீ சாரனி 6, ஸ்னே ரானா 1 ரன் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் மசபாடா கிளாஸ், நதின் டி கிளெர்க், நொன்குலுலேகோ மிளாபா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 338 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக அன்னெரி டெர்க்சன் 81, கேப்டன் சோலி டிரையோன் 67 ரன்கள் சேர்த்தனர்.

பந்துவீச்சில் இந்திய மகளிர் அணி தரப்பில் அமன்ஜோத் கவுர் 3, தீப்தி சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 11-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய மகளிர் அணி.