உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணிகள்! | Indian teams in the Archery World Cup final
வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது.
தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி, மெக்சிகோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் மதுரா தமன்கோங்கர், சிகிதா தனிபர்த்தி, ஜோதி சுரேகா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 232-229 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், அரை இறுதி சுற்றில் 232-230 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனையும் தோற்கடித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, மெக்சிகோவுடன் மோதுகிறது.