EBM News Tamil
Leading News Portal in Tamil

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Coach Gautam Gambhir about does Rohit Kohli play in England Test series


புதுடெல்லி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் தனக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 38 வயதான ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தொடருவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் 36 வயதை கடந்துள்ள விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது:

ஒரு பயிற்சியாளரின் வேலை அணியைத் தேர்ந்தெடுப்பது அல்ல. அணியை தேர்வு செய்வது தேர்வுக்குழுவினரின் வேலை. ஒரு போட்டியில் விளையாடும் 11 பேரை மட்டுமே பயிற்சியாளர் தேர்வு செய்வார். எனக்கு முன்பு பயிற்சியாளராக இருந்தவர்களும் தேர்வாளர்கள் அல்ல, நானும் தேர்வாளர் அல்ல.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சிறப்பாக செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வீரர்கள் எப்போது விளையாட தொடங்குகிறார்கள், எப்போது முடிக்கிறார்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு.

நீங்கள் எப்போது விலக வேண்டும் என்பதை எந்த பயிற்சியாளரும், எந்த தேர்வாளரும், பிசிசிஐயும் சொல்ல முடியாது. சிறப்பாகச் செயல்பட்டால், ஏன் 40 வயது, 45 வயது வரை நீங்கள் ஜாலியாக விளையாட முடியும், உங்களை யார் தடுப்பது?”

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடுவது அவர்களின் செயல்திறனைப் பொறுத்தது. அதை வைத்துதான் அவர்களின் தேர்வை உறுதி செய்ய முடியும்.

அவர்களுடைய செயல்திறனை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை உலகம் பார்த்தது. எந்த ஒரு விளையாட்டு வீரரும் பிரம்மாண்டமான பிரியாவிடை பற்றி நினைத்து கிரிக்கெட் விளையாடுவதில்லை. விடைபெறுவதை விட, அவர்கள் நாட்டுக்காக போட்டிகளை எப்படி, எந்த சூழ்நிலைகளில் வென்றார்கள் என்பதை நினைவில் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அவருக்கு பிரியாவிடை கிடைக்குமா இல்லையா என்பது முக்கியமல்ல. அவர் நாட்டுக்காக பங்களிப்பு செய்திருக்கிறார் என்றால், அதுவே ஒரு பெரிய பிரியாவிடை. நாட்டு மக்களின் அன்பை விட பெரிய கோப்பை ஏதாவது உண்டா? கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாவிடை ஒரு பொருட்டல்ல. இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.