ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கிய ஸ்ரேயஸின் மாஸ்டர் ஸ்ட்ரோக் | IPL 2025 | Shreyas masterstroke to move Josh Inglis at third position batting order IPL 2025
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார்.
இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி லக்னோவின் அடிப்படைகளைத் தகர்த்ததோடு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகத்துக்கு உத்வேக மூட்டினார்.
இங்லிஸ் 14 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இதில் 1 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் பவர் ப்ளேயில் பஞ்சாப் கிங்ஸ் 66 ரன்களை விளாசிட மாறாக லக்னோ தங்கள் பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 38 ரன்களையே எடுத்தனர். 237 ரன்கள் இலக்கை விரட்டும் போது இத்தகைய மந்தமான தொடக்கம் லக்னோவுக்கு 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைப் பெற்றுத் தந்தது.
25 பந்துகளில் 45 ரன்களை விளாசிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 3-ம் நிலை தன்னுடையது என்று கருதாமல் இங்லிஸை இறக்கிவிட்டது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பார்வையான ஸ்ரேயஸ் கேப்டன்சியில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சியை நிரூபித்தது. இங்லிஸின் ஆட்டம் பஞ்சாபுக்கு ஒரு அடித்தளத்தையும் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற போக்கையும் கற்றுக் கொடுத்தது.
ரிக்கி பாண்டிங் மீண்டும் ஸ்ரேயஸ் அய்யரின் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை விதந்தோதும் போது, “இங்லிஸை 3-ம் நிலைக்கு முன்னேற்றியது ஸ்ரேயஸ் அய்யர் என்னும் கேப்டனின் முடிவுதான். அதாவது இந்தப் பிட்சில், அதுவும் அத்தகைய பந்துவீச்சில் விக்கெட் விரைவில் விழுந்தால் 3-ம் நிலையில் இங்லிஸை இறக்க வேண்டும் என்று அய்யர் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்தார்.
மயங்க் யாதவ் முன் ஓவர்களில் வீச வருவார் என்று எதிர்பார்த்தோம். மயங்க் யாதவ் பவுலிங்கைப் பார்த்தோமானால் அவர் கொஞ்சம் லெந்திற்குக் குறைவாக ஷார்ட் ஆக வீசுபவர். இத்தகைய ஷார்ட் லெந்த் இங்லிஸின் பலங்களில் ஒன்று. இங்லிஸின் புல் ஷாட்கள் எடுத்த எடுப்பிலேயே பிரமாதம். பிரப்சிம்ரனும் இங்லிஸும் வெளுத்து வாங்கி விட்டனர்.
பிறகு ஸ்ரேயஸ் அய்யர், ஷஷாங்க் மிடில் ஓவர்களைக் கவனித்துக் கொண்டனர். லக்னோ அணி 3-ம் நிலையில் இங்லிஸை இறக்குவோம் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் அணியில் கடைசி வரையில் பேட்டிங் இருப்பதால் தொடக்க வீரர்கள் நடுவரிசை வீரர்கள் சுதந்திரமாக ஆடுகின்றனர். முதலில் பேட்டிங் எடுத்து அத்தகைய பெரிய ஸ்கோரை அடிப்பது உண்மையில் ஒரு பெரும் முயற்சிதான்.” என்றார்.