‘தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ – சொல்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி | I take full responsibility for the defeat says CSK captain Dhoni
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.
நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 55, விராட் கோலி 62, தேவ்தத் படிக்கல் 17, கேப்டன் ரஜத் பட்டிதார் 11, ஜிதேஷ் சர்மா 7 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் களம்புகுந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் ஷேக் ரஷீத் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அபாரமாக விளையாடினார். அவர் 48 பந்துகளில் 94 ரன்கள் (9 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தார். சேம் கரண் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எம்.எஸ்.தோனி 12, டெவால்ட் பிரேவிஸ் 0, ஷிவம் துபே 8 ரன்கள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தன. ஆனால், அந்த ஓவரில் சிஎஸ்கே அணியால் 12 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதையடுத்து பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணிக்கு இது 9-வது தோல்வியாகும். குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய ஷெப்பர்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: நான் பேட்டிங் செய்ய களத்தில் நுழைந்தபோது இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றி விளையாடியிருக்க வேண்டும் என நினைத்தேன். தோல்விக்கான முழு பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.
பந்துவீச்சில் இன்று நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நவீன யுகத்தில் பேட்ஸ்மேன்கள், யார்க்கர் பந்துகளில் எப்படி விளையாட வேண்டும் என்று தீவிர பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், எங்கள் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்துகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், யார்க்கர் பந்துகளை ஜடேஜா அருமையாக கையாள்கிறார். பேட்டிங் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் நாங்கள் ஓர் அணியாக மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இவ்வாறு தோனி கூறினார்.