EBM News Tamil
Leading News Portal in Tamil

ரியான் பராக்கின் அதிரடி ஆட்டம் வீண்: கடைசி பந்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி! | Riyan parag knock went vain kkr wins rr in last ball thriller ipl 2025


கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 207 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 95 ரன்கள் விளாசி இருந்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரஸல், 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ரகுவன்ஷி 44, ரஹானே 30, குர்பாஸ் 35 ரன்கள் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 45 பந்துகளில் 95 ரன்களை அவர் எடுத்தார். 6 ஃபோர், 8 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இதில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அவர் எதிர்கொண்ட அடுத்தடுத்த பந்துகளில் விளாசி இருந்தார். ஜெய்ஸ்வால் 34, ஹெட்மயர் 29, ஷுபம் துபே 25 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா வீசினார். முதல் 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தனர் ஆர்ச்சரும், ஷுபம் துபேவும். கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தனர். இருப்பினும் 2-வது ரன் முயற்சியில் ஆர்ச்சர் ரன் அவுட் ஆனார். இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது நடப்பு சாம்பியனான கொல்கத்தா.

டெத் ஓவர்களில் கொல்கத்தா அதிரடி: இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு உதவியது டெத் ஓவர்களில் குவித்த ரன்கள் தான். அந்த அணி ரஸல் அதிரடியால் இறுதி ஓவர்களில் 85 ரன்கள் குவித்தது. ஆனால், ராஜஸ்தான் அணி 50 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இந்த சீசனில் இருந்து லீக் சுற்றோடு ஏற்கெனவே ராஜஸ்தான் அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை ரஸல் பெற்றார்.