பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்: பார்முக்கு திரும்புவாரா ரிஷப் பந்த்? | lsg to Clash with Punjab Kings today Will Rishabh Pant return to form ipl 2025
தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 13 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
அந்த ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில், 72 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 பந்துகளில், 54 ரன்களும் விளாசி அசத்தியிருந்தனர். யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
டாப் ஆர்டரில் பிரியன்ஷ் ஆர்யா நடுவரிசையில் நேஹல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்து இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்திலும் லக்னோ அணி வீழ்ந்திருந்தது.
இந்த தோல்விகளில் இருந்து மீண்டுவர லக்னோ அணி முயற்சிக்கக்கூடும். 377 ரன்கள் குவித்துள்ள நிகோலஸ் பூரன், 344 ரன்கள் சேர்த்துள்ள மிட்செல் மார்ஷ், 326 ரன்கள் எடுத்துள்ள எய்டன் மார்க்ரம் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். பந்துவீச்சில் மயங்க் யாதவ், அவேஷ் கான் ஜோடி பலம் சேர்க்கக்கூடும்.
லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் கணிசமான அளவிலான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் அந்த அணி உள்ளது. கேப்டன் ரிஷப் பந்த்தின் பார்ம் கவலை அளிப்பதாக உள்ளது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 110 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் 6 ஆட்டங்களில் அவர், ஒற்றை இலக்க ரன்களே எடுத்தார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் ரிஷப் பந்த் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.