EBM News Tamil
Leading News Portal in Tamil

மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்: ஆர்சிபி அணி த்ரில் வெற்றி! | RCB vs CSK | RCB vs CSK highlights, IPL 2025


நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். ஆர்சிபி அணிக்காக ஜேக்கப் பெத்தல் மற்றும் விராட் கோலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் மிடில் ஓவர்களில் ரன் சேர்க்க தடுமாறினர். இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி பேட்டிங் அதற்கு காரணமாக அமைந்தது. 14 பந்துகளில் 53 ரன்களை அவர் விளாசினார். 4 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார்.

வெற்றி பெற 214 ரன்கள் என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. முதலில் இறங்கிய ஆயுஷ் மாத்ரே 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் எடுத்து அசத்தினார். எதிரில் ஆடிய ஷேக் ரஷீத் 14 ரன்களுடன் வெளியேறினார். சாம் கரண் 5 ரன்களுடன் ஏமாற்றவே, இன்னொரு புறம் ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். தோனி 12 ரன்கள், டூபே 8 ரன்கள் என 20 ஓவர் முடிவில் இலக்கை எட்ட முடியாமல் 211 மட்டுமே எடுத்திருந்தது சிஎஸ்கே. 2 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது.