இங்கிலாந்து தொடருக்கு தேறுவாரா ஷமி? – ஆகாஷ் சோப்ரா சந்தேகமும் பின்னணியும் | Will Shami be fit for the England series – Akash Chopra doubts and background
ஐபிஎல் 2025 முகமது ஷமிக்கு சரியாக அமையாவிட்டாலும் பரவாயில்லை, மோசமாக உள்ளது என்பதே இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட்கள் கொண்ட தொடருக்குச் செல்வதற்கு முன்பாக எழுந்துள்ள புதிய கவலையாக உள்ளது.
அவரது பந்து வீச்சில் கிரீஸுக்கு நெருங்கும்போது இருக்கும் அந்த கடைசி நேர வேகம் மற்றும் வேகமாகக் கையைச் சுற்றி இறக்கும் தன்மையும் கொஞ்சம் மந்தமடைந்திருப்பது போல் தெரிவதோடு, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பந்தின் திசையைக் கட்டுப்படுத்துவதில் கடுமையாகப் போராடி வருகிறார் ஷமி.
ஜோப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் சன் ரைசர்சுக்கு எதிராக 4 ஓவர்களில் 76 ரன்கள் விளாசப்பட்டார் என்றால், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 75 ரன்களைக் கொடுத்து செம சாத்து வாங்குகிறார் ஷமி.
முழங்கால் காயம் காரணமாக கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஷமி ஆடவில்லை. மார்ச் 2024-ல் அவரது வலது பாதத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2023-ல் குஜராத் டைட்டன்ஸுக்காக 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். வெள்ளிக்கிழமையன்று நடந்த நடப்பு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராகவே 3 ஓவர் 48 ரன்கள் விளாசப்பட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்டுகள் என்பதோடு சராசரி 56.17 என்று எகிறியுள்ளது. சிக்கன விகிதம் ஓவருக்கு 11.23 ஆக உள்ளது. இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா, ‘ஷமியின் பந்துவீச்சு நல்ல நிலையில் இல்லை’ என்று கூறியுள்ளார். நியூஸிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேனி மாரிசன், “பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தொடங்குவது சிக்கல்தான்” என்றார்.
டேனி மாரிசனை மறுத்துக் கூறிய ஆகாஷ் சோப்ரா, “இல்லை. ஷமி பவுலிங் பெரிய கேள்விக்குறியாக உள்ளது, அதுவும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இருக்கும்போது, அவர் காயத்திலிருந்து வந்ததனால் அல்ல, அவர் கடந்த ஆண்டே உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடினார், ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபியில் ஆடினார். இடையேயும் நிறைய போட்டிகளில் ஆடினார்.
எனவே நாம் காயத்தினால்தான் அவர் பவுலிங் மோசமாக உள்ளது என்று முன்அனுமானித்துக் கொள்கிறோம். ஆனால், அவர் பந்துவீச்சு மீது சீரியஸான கேள்விக்குறி உள்ளது. சன் ரைசர்ஸ் கதை ஒருபுறம், இன்னொரு புறம் இங்கிலாந்து தொடர் உள்ளது. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் பும்ரா தனித்து விடப்பட்டார் என்று நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். அங்கு ஷமி இருந்திருந்தால் நிச்சயம் விஷயம் வேறு கதை.
இப்போதும் இங்கிலாந்தில் ஷமி இருந்தால், அவர் பழைய ஷமியாக இருப்பாரா என்பதே என் கேள்வி. ஐபிஎல் தொடரை விட்டுத் தள்ளுவோம். இப்போதைக்கு ஷமியின் வேகம் கொஞ்சம் குறைந்து விட்டது. ஒரே இடத்தில் சீராக அவரால் வீச முடியவில்லை. இதுதான் அவரது பலமே. ஆனால், அது போய் விட்டது. அவரை பிளிக்கில் சிக்ஸ் எல்லாம் அடித்து விட முடியாது. கட் ஷாட் ஆடவே அவர் இடம் கொடுக்கமாட்டார். ஆனால் இப்போது சர்வ சகஜமாக இவரை இத்தகைய ஷாட்களை ஆடுகின்றனர். எனவே அவர் நல்ல பந்து வீச்சு நிலையில் இல்லை” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.