பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஆர்சிபி: சிஎஸ்கேவுடன் இன்று பலப்பரீட்சை | rcb eyes playoff spot in ipl 2025 to play with csk today match preview
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.
4 அரை சதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி மீண்டும் ஒரு முறை வெற்றிக்கான பங்களிப்பை வழங்குவதில் தீவிரம் காட்டக்கூடும். கடந்த 3 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் அடித்துள்ள தேவ்தத் படிக்கல், டெல்லி அணிக்கு எதிரான மந்தமான ஆடுகளத்தில் 73 ரன்கள் விளாசிய கிருணல் பாண்டியா ஆகியோரும் இருந்தும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ரஜத் பட்டிதார், பில் சால்ட் ஆகியோரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.
பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்ஹட், கிருணல் பாண்டியா பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தினால் பந்துவீச்சு துறை கூடுதல் பலம் பெறும்.
சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் 2 வெற்றி, 8 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி இன்றைய போட்டி உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு கவுரவமான முறையில் தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 ரன்கள் விளாசிய சேம் கரண் மீண்டும் ஒரு முறை சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். டெவால்ட் பிரேவிஸும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இளம் வீரர்களான ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் கடந்த ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் கணிசமான அளவில் ரன்கள் சேர்க்க முயற்சிக்கக்கூடும். கடந்த காலங்களில் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்ததால் இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி அதிரடியாக விளையாடி பலம் சேர்த்தார். அவர், விரைவாக சேர்க்கும் 30 ரன்கள் சிஎஸ்கேவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தின. ஆனால் இம்முறை இது இரண்டுமே இல்லாமல் உள்ளது.
எனினும் இன்றைய ஆட்டத்தின் முடிவு சிஎஸ்கேவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் துணிச்சலுடன் விளையாடக்கூடும். பந்துவீச்சில் கலீல் அகமது, நூர் அமகது ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க முயற்சிக்கக்கூடும். 2026-ம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் இன்றைய ஆட்டம் ஜாம்பவான்களான விராட் கோலி, தோனி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும்.