Asperger Syndrome – ‘பில்கேட்ஸ் எதிர்கொண்ட இந்தப் பிரச்சினை’யின் அறிகுறிகளும் தாக்கமும் | Bill Gates Has Asperger Syndrome, His Daughter Phoebe Reveals
வாஷிங்டன்: “என் அப்பாவுக்கு ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் இருக்கிறது” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மகள் ஃபீப் கேட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். இப்பிரச்சினையின் அறிகுறிகள் முதல் தாக்கங்கள் வரை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
‘கால் ஹெர் டாடி’ (Call Her Daddy) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஃபீப் கேட்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 22 வயதான ஃபீப் தனது தந்தையின் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோமால் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை தான் தனது தந்தையை சந்திக்க தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்தபோது நேர்ந்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். “எனது நண்பர்களுக்கு அது ஒரு திகில் அனுபவம். ஆனால், எனக்கு அதுவொரு நகைப்புக்குரிய அனுபவம்… என் தந்தை பிறருடன் பழகுவதில் ஆர்வம் காட்டாதவர் என்பது எனக்குத் தெரிந்ததால்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதென்ன ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம்! – திரும்பத் திரும்ப பொதுவெளியில் பேசப்பட்டதன் விளைவாக நம் அனைவருக்கும் ஆட்டிசம் குறைபாடு (Autism) பற்றி ஓரளவுக்கேனும் புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆட்டிசம் என்பது ஒரு வகையான மூளை வளர்ச்சி குறைபாடு. இதனால் உரையாடலிலும், சமூகத்தில் மற்றவர்களுடனும் கலந்து பழகுவதிலும் பாதிப்புகள் உருவாகும். ஆட்டிஸ்டிக் குழந்தைகள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இவர்கள் தன்னையறியாமல் இதை செய்யும் நிலைக்கு ஆளாவார்கள் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம்.
ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் (Asperger’s syndrome) எனப்படுவதும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் வீச்சினுள் அடங்கும் ஒரு படிநிலைதான். இந்த வகையான பாதிப்பு உடையவர்களுக்கு சமூகத்தில் பிறருடன் பேசிப் பழகுவதில் சிரமம் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் தனக்கென ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி, அதிலேயே பயணிப்பார்கள். அவர்களுடைய விருப்ப எல்லைகள் குறுகியதுதாக இருக்கும். சிலருக்கு மட்டும் கை தட்டுவதற்கு நிகராக எதற்கெடுத்தாலும் கைகளை அசைத்து ஆர்ப்பரிக்கும் பழக்கம் இருக்கும். ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் உள்ளவர்களிடம் தென்படும் சில அறிகுறிகள்:
- கண்ணோடு கண் பார்ப்பதில் சிரமம்
- சமூக கூடுகைகளில் தங்களை இயல்பாக பொருத்திக்கொள்ள முடியாத நிலை.
- ஓர் உரையாடலின்போது அடுத்தவருக்கு சரியாக பதிலளிக்க முடியாதது.
- சமூகத்தில் இயல்பாகக் கருதப்படும் விஷயங்களை ஏற்கமுடியாதது
- பிறரின் உடல் மொழியை புரிந்துகொள்ள முடியாதது.
- முகப்பாவனைகளை புரிந்துகொள்ள இயலாதது.
- உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம்.
- ஒருவித இயந்திரத் தன்மையுடன் பேசுதல்.
- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மட்டும் அதீதமாகப் பேசுதல்.
- ஒரு சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பிரயோகப்படுத்துதல்.
- மாற்றங்களை வெறுத்து ஒதுக்குதல்.
- ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பது. உதாரணத்துக்கு ஒரே வகையான உணவு வகைகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவது போன்று சொல்லலாம்.
அடல்ட் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் அறிகுறிகள்: பில் கேட்ஸ் 69 வயதானவர். அவரது மகள் ஃபீப் கேட்ஸ் சுட்டிக்காட்டுவது போல் அவரைப் போன்ற அடல்ட்களிடம் காணப்படும் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம்-க்கு என பொதுவான அறிகுறிகள் இவைதான் என்று பட்டியலிட முடியவில்லை என்றாலும் சிலவற்றைப் பட்டியலிடுகிறது மருத்துவ உலகம்.
- எதையும் திறம்பட செய்வதில் நாட்டமின்மை.
- சொல்வன்மை.
- ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தில் நாட்டம்.
- சமூக தொடர்புகளில் சிக்கல்.
- அதிக உணர்திறன் ஆகியன பட்டியலிடப்படுகின்றன.
அந்த வகையில் பார்த்தால் ஆட்டிசம் போல் அல்லாமல் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் கொண்டவ வயது வந்த நபர்களுக்கு சமூகத் தொடர்பில்தான் பெரியளவில் பிரச்சினை இருக்கும்.
அண்மையில் பில் கேட்ஸ் அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு ஏன் சமூகத் தொடர்புகள் சிரமமாக இருந்தத், நான் ஏன் ஒருசில விஷயத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் விரும்பிச் செய்தேன் என்றெல்லாம் என் பெற்றோர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் மட்டும் இன்றைய உலகத்தைச் சேர்ந்த சிறுவனாக இருந்திருந்தால் என்னை ஆட்டிஸ்டிக் என்று மருத்துவ உலகம் கண்டறிந்திருக்கும்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஆனாலும் பில் கேட்ஸ் ஆட்டிசம் மருத்துவப் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளிடம் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் கண்டறியப்படுமேயானால் அவர்களை மனநல ஆலோசகர்கள், நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் வளர்ச்சி – நடத்தை சார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிக்கும் டெவலப்மென்ட்டல் பீடியாட்ர்சீயன்கள் என 4 விதமாக மருத்துவர்களின் சிகிச்சை அவசியமாகிறது.
ஆட்டிசம், ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் ஆகியனவற்றை சிறு வயதிலேயே கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கும் உட்படுத்தினால் அவர்கள் தங்களின் திறமைகளை அடையாளம் கண்டு அதில் கவனம் செலுத்த வைக்க முடியும். அவர்கள் யாரையும் சாராமல் தங்களது அன்றாடத் தேவைகளை தாங்களே செய்து கொள்ளும்படி பழக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“என் அப்பாவுக்கு ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் இருக்கிறது” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மகள் ஃபீப் கேட்ஸ் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெகு இயல்பாக சொல்வதும், என்னை பரிசோதித்திருந்தால் நான் ஆட்டிஸ்டிக் குழந்தையாக இருந்திருப்பேன் என்று பில் கேட்ஸ் ஒப்புதல் அளிப்பதும் ஆட்டிசம் பாதித்தால், ஆஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரோம் இருந்தால் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்ற எதிர்மறை எண்ணங்களை தவிடுபொடியாக்கும் சாட்சியங்கள்.
சிறப்புக் குழந்தைகளுக்கு என்று எண்ணெற்ற பிளாட்ஃபார்ம்கள் வந்துவிட்ட நிலையில், ஓரளவுக்கு வசதி படைத்தோர் சுமை தெரியாமல் அந்தக் குழந்தைகளை வழிநடத்த முடிகிறது. வசதியற்ற குடும்பங்களில் உள்ள சிறப்புக் குழந்தைகளைப் பேணுவதுதான் பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.