ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்கள் குவித்து சூர்யகுமார் யாதவ் சாதனை! | mi player suryakumar yadav scored 4000 runs in ipl cricket
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்திய டி20 அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் சேர்ந்துள்ளார்.
லக்னோ அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் 54 ரன்களை விளாசி ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். அவர் இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 4,021 ரன்களைக் குவித்துள்ளார்.
மேலும், குறைந்த பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் புரிந்தார். அவர் 2,714 பந்துகளைச் சந்தித்து இந்த ரன்களை எட்டியுள்ளார். கிறிஸ் கெயில் 2,653 பந்துகளிலும், ஏபி டிவில்லியர்ஸ் 2,658 பந்துகளிலும் 4 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.
மேலும், கடந்த 2023-ம் ஆண்டு முதல் மும்பை வான்கடே மைதானத்தில் 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 780 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், 7 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 103 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார்.
இந்தத் தொடரில் தற்போது வரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 427 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். தொடரில் இதுவரை 3 அரை சதங்களை அவர் விளாசியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக இதுவரை 2 சதங்களும், 27 அரை சதங்களும் குவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
மேலும், ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டில் 25 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் குவித்துள்ளார் சூர்யகுமார். இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 2014-ல் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் 25 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார். ஐபிஎல் போட்டியில் இதுபோன்ற சாதனையை ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி, சாய் சுதர்ஷன் ஆகியோர் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் செய்துள்ளனர்.