டி 20-ல் 400 ஆட்டங்களில் பங்கேற்று தோனி சாதனை | MS Dhoni becomes fourth Indian cricketer to play 400 T20 matches
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 400-வது ஆட்டமாக அமைந்தது.
இதன் மூலம் 400 டி 20 போட்டிகளில் விளையாடிய 4-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா (456) முதலிடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் (412) 2-வது இடத்திலும், விராட் கோலி (407) 3-வது இடத்திலும் உள்ளனர்.
அதேவேளையில் உலக அரங்கில் தோனி 24-வது இடத்தில் உள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளின் கெய்ரன் பொலார்ட் 695 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். இந்தியா, சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், ஜார்க்கண்ட் ஆகிய அணிகளுக்காக டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள தோனி 7,572 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தோனி 6-வது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 273 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 24 அரை சதங்களுடன் 5,383 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 84* ஆகும். 43 வயதான தோனி, நடப்பு சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார்.