EBM News Tamil
Leading News Portal in Tamil

‘2010 சீசன் போல சிஎஸ்கே மீண்டெழும்’ – சிஇஓ காசி விஸ்வநாதன் | csk will bounce back says ceo kasi viswanathan ipl 2025


சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி தலைமையிலான அணியை ஒருபோதும் நிராகரித்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வி தழுவியுள்ளது சிஎஸ்கே.

அணியின் படுமோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே. பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.

டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் என அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் ரன் குவிக்க வேண்டுமென்ற முனைப்பு காட்டாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், நவீன டி20 பார்மெட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

“இந்த சீசனில் சிஎஸ்கே ஆட்டத்தை பார்த்து அனைவரும் ஏமாற்றம் அடைந்து இருப்பீர்கள் என தெரியும். உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கும். இதற்கு முன்பும் இது போல நடந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை நாங்கள் சிறந்த கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால், எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியின் கேப்டன் தோனியாக இருப்பதால் அது நடக்கும் என்று நம்புகிறோம்.

கடந்த 2010-ம் ஆண்டு சீசனும் இது போல தான் இருந்தது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அதன் பின்னர் கம்பேக் கொடுத்து, அந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றோம். அது தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே வென்ற முதல் பட்டம். வீரர்கள் அர்ப்பணிப்புடன் கடும் பயிற்சி மேற்கொன்டு வருகிறார்கள். அது எதிர்வரும் ஆட்டங்களில் வெளிப்படும். நாங்கள் மீண்டெழுவோம்” என காசி விஸ்வநாதன் கூறியிருந்தார். தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்க நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

2010 சீசன்: கடந்த 2010 ஐபிஎல் சீசனில் முதல் 7 போட்டிகளில் 5 தோல்வியை சந்தித்திருந்தது தோனி தலைமையிலான சிஎஸ்கே. அதன் பின்னர் அனைத்து ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வென்றது சிஎஸ்கே.