லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: மீண்டெழுமா டெல்லி அணியின் தொடக்க பேட்டிங்? | delhi capitals to play with lsg today in ipl 2025 match preview
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. புள்ளிகள் பட்டியலில் உயர்வான இடத்தில் இருந்தாலும் டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 ஆட்டங்களில் விளையாடி 81 ரன்கள் சேர்த்த டு பிளெஸ்ஸிஸ் காயம் காரணமாக அதன் பின்னர் களமிறங்கவே இல்லை. அதேவேளையில் ஜேக் பிரேசர் மெக்கர்க் 6 ஆட்டங்களில் விளையாடிய போதிலும் இன்னும் பார்முக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். 9.16 சராசரியுடன் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள அவர், கடந்த ஆட்டத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரெல் ஒரு சில ஆட்டங்களில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். ஆனால் அவரிடம் தொடர்ச்சியான செயல் திறன் இல்லாமல் உள்ளது. அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் அவர், அதை பெரிய அளவிலான இன்னிங்ஸாக மாற்றத் தவறுகிறார். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கருண் நாயர் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
கடைசி 5 ஆட்டங்களில் டெல்லி அணி 3 வித தொடக்க ஜோடியுடன் களமிறங்கியது. எனினும் இந்த ஆட்டங்களில் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு முறையே 23, 34 0, 9, 0 ரன்களே சேர்த்தது. நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் பலமாக இருப்பதால் டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களின் பார்ம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் உள்ளது. அக்சர் படேல், கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் ஆகியோர் தங்களது தாக்குதல் ஆட்டத்தால் பலம் சேர்த்து வருகின்றனர்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சு கடும் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. மிட்செல் ஸ்டார்க் ஓவருக்கு சராசரியாக 14.70 ரன்களை தாரை வார்த்திருந்தார். முகேஷ் குமார் 4 ஓவர்களில் 40 ரன்களை வழங்கியிருந்தார். மோஹித் சர்மா 2 ஓவர்களை வீசிய நிலையில் சராசரியாக ஓவருக்கு 14 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். விப்ராஜ் நிகாம், குல்தீப் யாதவ் ஆகியோரும் 30 ரன்களுக்கு மேல் வழங்கியிருந்தனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய வேண்டுமானால் டெல்லி அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையும் உத்வேகம் பெற வேண்டும்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் 18 மற்றும் 20-வது ஓவரை அற்புதமாக வீசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார். ஆட்டத்தில் எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றியை பெற முடியும் என்ற சூப்பர் ஜெயண்ட்ஸின் நம்பிக்கையை இது இரட்டிப்பாக்கக்கூடும்.
பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட தவறிய மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோர் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் அரை சதம் விளாசிய எய்டன் மார்க்ரம், ஆயுஷ் பதோனி ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். இறுதிக்கட்ட ஓவர்களில் அப்துல் சமத் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வது வலுசேர்க்கக்கூடும். ரிஷப் பந்த், டேவிட் மில்லர் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது டெல்லி அணி. இந்த ஆட்டத்தில் சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்களையும், விப்ராஜ் நிகாம் 15 பந்துகளில் 39 ரன்களையும் விளாசி வெற்றி தேடிக்கொடுத்திருந்தனர். இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.