EBM News Tamil
Leading News Portal in Tamil

‘பிளே ஆஃப் சுற்றுக்கு முயற்சிப்போம்.. முடியாவிட்டால் அடுத்த ஆண்டு வலுவாக திரும்புவோம்’ – சிஎஸ்கே கேப்டன் தோனி | We try for play off if not will come back stronger next season CSK captain Dhoni


மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 76 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முன்னதாக தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சிஎஸ்கே 8 ஆட்டங்களில் விளையாடி 6-வது தோல்வியை சந்தித்துள்ளது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது. தற்போதைய அணியின் பார்மை கருத்தில் கொண்டால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவிப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது: நாங்கள் சராசரிக்கும் குறைவான ஸ்கோரையே எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் 2-வது பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதை நாங்களை அனைவரும் அறிவோம். மிடில் ஓவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம்.

உலக அரங்கில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்களில் ஒருவராக ஜஸ்பிரீத் பும்ரா உள்ளார். இறுதிக்கட்ட ஓவர்களில் வீசக்கூடிய பந்து வீச்சை மும்பை அணி சற்று முன்னதாக தொடங்கியது. நாங்கள் அதை மூலதனமாக்கி சற்று முன்கூட்டியே ரன்கள் குவிக்க தொடங்கியிருக்க வேண்டும்.

நடு ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் அவர்களுடைய பீல்டிங் அமைப்பு ஒரே மாதிரியே இருந்தது. ஒரு சில ஓவர்களில் சற்று கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம். எங்களுக்கு அந்த ரன்கள் தேவைப்பட்டது, ஏனெனில் பனிப்பொழிவை கருத்தில் கொள்ளும் போது 176 ரன்கள் என்பது சராசரிக்கும் குறைவானதே.

ஆயுஷ் மகத்ரே சிறப்பாக பேட்டிங் செய்தார். இதுபோன்ற அணுகுமுறைதான் தேவை. உங்கள் ஷாட்களை விளையாட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். அதேநேரத்தில் ஷாட்களை தேர்ந்தெடுப்பதிலும் உங்கள் பலம் இருக்கிறது. ஆயுஷ் மகத்ரே தனது ஷாட்களை விளையாடினார், அவர், தொடர்ந்து தனது ஷாட்களை விளையாடினால், மிடில் ஆர்டருக்கும், கீழ் வரிசைக்கும் சற்று எளிதாக இருக்கும்.

அந்த வகையில் டாப் ஆர்டரில் ஆயுஷ் மகத்ரேவின் செயல் திறன் எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். கடந்த காலங்களில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியதால் வெற்றி பெற்றோம். அதே நேரத்தில், சிப்பாக விளையாடாதபோது, அதைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது முக்கியம். அதே நேரத்தில் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.

பனிப்பொழிவு சற்று இருந்தது, எனினும் பந்தை இறுகப்பற்ற முடிந்தது. அதேவேளையில் மும்பை அணி சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடியது. பந்து வீச்சில் முதல் 6 ஓவர்கள் மிகவும் முக்கியம். இதில் அதிக ரன்களை வழங்கிவிட்டால் எதிரணிக்கு ஆட்டம் எளிதாக அமைந்துவிடும். அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர்.

2020-ம் ஆண்டும் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. கிரிக்கெட்டின் சரியான வடிவத்தை விளையாடுகிறோமா என்பதை பார்க்க வேண்டும். மேலும் பேட்ஸ்மேன்கள் தங்களை பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை கேள்விக்குறிகளாக உள்ளன. அதைத் தவிர அணியில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கிறோம்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எங்கள் முன்னால் இருக்கக்கூடிய அனைத்து ஆட்டங்களையும் வெல்ல வேண்டும். எனினும் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். சில ஆட்டங்களில் நாங்கள் தோல்வி அடைந்தால், அடுத்த ஆண்டுக்கான சரியான அணிச்சேர்க்கையை பெறுவதில் கவனம் செலுத்துவோம்.

அதிக அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்புவது இல்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் அது நிகழவில்லை என்றால் அடுத்த ஆண்டுக்கான 11 வீரர்களை கண்டறிந்து வலுவாக மீண்டு வருவோம். இவ்வாறு தோனி கூறினார்.

இனிமேல் இளசுகள் படை… சிஎஸ்கே அணி எப்போதுமே அனுபவத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். கடந்த காலங்களில் 35 வயதை கடந்த வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிஎஸ்கேவை ‘டாடி ஆர்மி’ என்றுகூட அழைக்கத் தொடங்கினர். இருப்பினும் சிஎஸ்கே அனுபவ வீரர்கள் கொள்கையில் உறுதியாக இருந்து வந்தது. ஆனால் நடப்பு சீசனில் அனுபவமிக்க வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு ஊசலாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆட்டங்களில் இளம் வீரர்களான 23 வயதான அன்ஷுல் கம்போஜ், 20 வயதான ஷேக் ரஷித், 17 வயதான ஆயுஷ் மாத்ரே ஆகியோருக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுத்துள்ளது. மேலும் 21 வயதான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்ட் பிரேவிஸும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இவர்களுடன் 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வன்ஷ் பேடி, 18 வயதான ஆந்த்ரே சித்தார்த் ஆகியோரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் ரச்சின் ரவீந்திரா 25 வயதை எட்டாத நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 28 வயதை எட்ட உள்ளார். நூர் அகமது, பதிரனா ஆகியோரும் 22 வயதை கடக்கவில்லை. அடுத்த சீசனில் இவர்கள் பிரதானப்படுத்தப்படக்கூடும்.

நடுப்பகுதி 4 ஓவரும்.. இறுதிப்பகுதி 4 ஓவரும்.. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கின் போது சிஎஸ்கே முதல் 7 ஓவர்களில் 58 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக வீசப்பட்ட 4 ஓவர்களில் சிஎஸ்கே மந்தமாக விளையாடியது. மிட்செல் சாண்ட்னர் வீசிய 8-வது ஓவரில் 4 ரன்களும், ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 9-வது ஓவரில் 3 ரன்களும், வில்ஜேக்ஸ் வீசிய 10-வது ஓவரில் 4 ரன்களும், ஹர்திக் பாண்டியா வீசிய 11-வது ஓவரில் 3 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட்டன.

இந்த காலக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஜோடி பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த போதிலும் இவர்களது பேட்டிங் இந்த4 ஓவர்களில் சலிப்பை ஏற்படுத்தியது.

எனினும் அடுத்த 5 ஓவர்களில் இந்த ஜோடி 69 ரன்கள் விளாசியது. இதில் அஸ்வனி குமார் ஓவரில் விளசாப்பட்ட 24 ரன்களும் அடங்கும். ஆனால் கடைசி 4 ஓவர்களில் வெறும் 34 ரன்களை மட்டுமே சிஎஸ்கே அணியால் எடுக்க முடிந்தது. ஷிவம் துபே 17-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய தோனி மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர், பும்ரா விரித்த வலையில் சிக்கினார். நடுப்பகுதியில் 4 ஓவர்களிலும், இறுதிப் பகுதியில் 4 ஓவர்களிலும் சிஎஸ்கே அணி கூட்டாக சேர்த்த ரன்கள் வெறும் 48 மட்டுமே.

இந்த 8 ஓவர்களையும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்த வாய்ப்பு இருந்திருக்கக்கூடும். சிஎஸ்கேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் மிட்செல் சாண்ட்னர், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். சாண்ட்னர் 3 ஓவர்களில் 14 ரன்களையும், பும்ரா 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.