EBM News Tamil
Leading News Portal in Tamil

39 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் | ஐபிஎல் 2025 | KKR vs GT, IPL 2025: Gujarat Titans beat Kolkata Knight Riders


நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டம் இழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். கில் உடன் சேர்ந்து வலுவான கொல்கத்தா பவுலிங் யூனிட்டை பந்தாடினார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் பேட் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய கில் தொடர்ந்து ரன் சேர்த்தார். 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 10 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

பின்னர் களத்துக்கு வந்த ராகுல் டெவாட்டியா, 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து ஷாருக்கான் பேட் செய்ய வந்தார். அவர் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். பட்லர், 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 8 ஃபோர்களை அவர் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது குஜராத்.

199 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஓப்பனிங் இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் ஆடிய சுனில் நரேன் 17 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ரஹானே 36 பந்துகளில் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோரை ஏற்ற உதவினார். அடுத்து இறங்கிய வெங்கடேஷ் ஐயர்14, ரிங்கு சிங் 14, ரஸ்ஸல் 21, ராமந்தீப் 1, ரகுவன்ஷி 27 என 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.