‘சிஎஸ்கே இந்த அளவுக்கு தடுமாறி பார்த்ததே இல்லை’ – சுரேஷ் ரெய்னா விரக்தி | never seen csk struggle this much says suresh raina ipl 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறாவது தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏல யுக்தி மற்றும் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மாதிரியான இந்திய வீரர்களை ஏலத்தில் வாங்க தவறியது அணியின் தடுமாற்றத்துக்கு காரணம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலக, தோனி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றும் தோல்விகளுக்கு விடை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே இப்போது சவாலாக உள்ளது.
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், பயிற்சியாளரும் அந்த அளவுக்கு ஏலத்தில் சிறப்பாக செயல்படவில்லை என எண்ணுகிறேன். ஏலத்தில் திறன் படைத்த வீரர்கள் பலர் பங்கேற்றனர். அதுவும் பிரியன்ஷ் ஆர்யா போன்ற அபார திறன் கொண்ட இளம் வீரர்கள் அதிகம் இருந்தனர். அவரை பாருங்கள் இந்த சீசனில் அறிமுகமாகி சதம் விளாசி உள்ளார்.
ஏலத்துக்கு முன்பாக அணியை தேர்வு செய்ய அல்லது கட்டமைக்க அதிக அளவில் பணத்தை கைவசம் கொண்டு இருந்தீர்கள். ஆனால், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் மாதிரியான வீரர்களை ஏலத்தில் வாங்காமல் தவற விட்டீர்கள். மற்ற ஐபிஎல் அணிகளை கொஞ்சம் பாருங்கள். எந்த அளவுக்கு அதிரடி பாணி ஆட்டம் ஆடுகிறார்கள் என்பது புரியும். இந்த அளவுக்கு சிஎஸ்கே தடுமாறி நான் பார்த்தது கிடையாது” என ரெய்னா விரக்தியுடன் கூறியுள்ளார்.